மும்பை: சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பை மகராஷ்டிரா அரசு அதிரடியாக விலக்கிக் கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றது முதல் உத்தவ் தாக்கரே அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாஜகவின் திட்டங்கள் எல்லாம் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்து, அதன்படி செயல்படுகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் விஐபிகளுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்த மறு ஆய்வை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது. அதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் ’ பிரிவு பாதுகாப்பை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

எக்ஸ் பிரிவு பாதுகாப்பு என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பாகும். அதாவது சச்சினுக்கு ஒரு போலீஸ்காரர் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு தருவார்.

இனி இந்த பாதுகாப்பு சச்சினுக்கு கிடைக்காது. அதே நேரத்தில் தேவைப்பட்டால் வெளி இடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருந்து வந்த மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவிற்கு தரம் உயர்த்தப்பட்டு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.