மும்பை: மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டல பகுதிகளில் இணையவழி வர்த்தகத்துக்கு மாநில அரசு அனுமதித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
நாட்டில் அதிக கொரோனா தொற்றுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. கிட்டத்தட்ட பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துவிட்டது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்றானது காவல்துறை அதிகாரிகளையும் விடவில்லை.
இந் நிலையில், லாக்டவுன் காலத்திலும் சிவப்பு மண்டல பகுதிகளிலும் அனைத்து பொருட்களையும் இ காமர்ஸ் எனப்படும் இணைய வழி வர்த்தகத்துக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
சிவப்பு அல்லாத மண்டலங்களில் அரங்கங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பொது இடங்களை திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது. இருப்பினும், பார்வையாளர்களுடன் எந்த நிகழ்வுகளையும் நடத்த முடியாது.
மும்பை பெருநகர மண்டலம், புனே நகரம், சோலாப்பூர் நகரம், அவுரங்காபாத் நகரம், மாலேகான், துலே நாசிக் நகரம், ஜல்கான், அகோலா மற்றும் அமராவதி ஆகியவை ‘சிவப்பு மண்டலத்தின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.