மும்பை:

ராட்டியத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பலம் எந்தக் கட்சிக்கும் இல்லாததால் ஜனாதிபதி ஆட்சிக்கு, கவர்னர்  பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்திருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யவில்லை என கவர்னர் மாளிக்கை அலுவலகம் விளக்கம் அளித்து  உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 21ந்தேதி தேர்தல் முடிவடைந்த நிலையில், எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

தேர்தலின்போது, பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், பாஜக  105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றிய நிலையில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், அதிகாரப்பகிர்வு காரணமாக இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. இதனால், சிவசேனா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், கடைசி நேரத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததாலும், காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க மறுத்து விட்ட நிலையில்  சிவசேனா ஆட்சி அமைக்கும் கனவு கலைந்தது.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் 54 இடங்களை கைப்பற்றி 3வது பெரியாக திகழும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 48 மணி நேரம் அவகாசம் வழங்குவதாக  கவர்னர்   பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.  அதற்கான கால அவகாசம், இன்று இரவு 8.30 மணி வரை உள்ளது. இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தியது.

ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 உடன் காங்கிரஸ் கட்சியின் 44 இடங்களும் சேர்ந்து 98 இடங்கள் மட்டுமே உள்ள, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழலே தொடர்ந்து வருகிறது.

ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்தவொரு கட்சியும் மற்ற கட்சிக்கு ஆதரவு தர மறுத்து வருவதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலம் கடந்த 8ந்தேதியுடன் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது, மாநிலம் கவர்னரின் கட்டுப்பாட்டில்  செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. சிவசேனா கட்சியும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருப்பதாக, முப்பையில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தவில்லை என்று மாநில கவர்னர் மாளிகையான ராஜ்பவன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் மாளிகை மக்கள் தொடர்பு அதிகாரி, மகாராஷ்டிராவில் ஜனாதிபதியின் ஆட்சியை ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பரிந்துரைக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.  மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு அமைக்கும் செயல்முறை நடந்து வருகிறது, அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆளுநர் ஏற்கனவே என்.சி.பி.க்கு ஒரு கால அவகாசம் வழங்கியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கான நேரம் இரவு 8:30 மணிக்கு முடிவடைகிறது. இந்த காலக்கெடு காலாவதியான பின்னரே ராஜ் பவனிடமிருந்து எந்த முடிவும் எடுக்கப்படும் என்று  தெளிவு படுத்தி உள்ளார்.