மகாராஷ்டிரா : சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்புக் கடிதம் அனுப்பிய ஆளுநர்

மும்பை

சிவசேனா தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வருமாறு மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடிதம் அனுப்பி உள்ளார்

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி திடீரென பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.   பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.    ஆனால் இந்த அரசுக்குத் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.  திடீரென தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவார் ராஜினாமா செய்து மீண்டும் தனது கட்சியுடன் இணைந்தார்.   இதனால் பாஜகவுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளதால் நேற்று தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தற்போது சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆட்சி அமைக்க வருமாறு கடிதம் எழுதி உள்ளார்.  அவர் தனது கடிதத்தில் தற்போது சிவசேனாவின் கூட்டணியில் 166 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளதாகவும் அந்த எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக உள்ளதால் சிவசேனா தலைமையிலான கூட்டணியை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் உத்தவ் தாக்கரேவை முதல்வராகப் பதவி ஏற்குமாறும் அவர் தற்போது சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லாததால் பதவி ஏற்ற ஆறு மாதங்களுக்குள் உறுப்பினராக வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   இன்னும் 7 நாட்களுக்குள் அதாவது டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையைக் கூட்டணி நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.