மும்பை: சிவசேனாவை நாளை ஆட்சி அமைக்க வருமாறு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருக்கிறார்.

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் கூட்டணியான சிவசேனா 56 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைக்க போதிய எம்எல்ஏக்கள் இருந்தும் முதலமைச்சர் பதவி கேட்டு சிவசேனா நெருக்கடி கொடுத்து வருகிறது.

அதனால் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு இழுபறி நிலவி வந்தது. அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் நாளைக்குள் ஆட்சி அமைக்க வருமாறு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாத நிலை இருப்பதால் ஆட்சி அமைக்க பாஜக விரும்ப வில்லை என்று அறிவித்துவிட்டது. இதையடுத்து, 2வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்து இருக்கிறார்.

மேலும் பெரும்பான்மையை நாளை மாலை 7.30க்குள் நிரூபிக்குமாறும் கூறி இருக்கிறார். அதனால் மகாராஷ்டிர அரசியல் களம் பரபரத்து கிடக்கிறது. முதலமைச்சர் பதவி விவகாரத்தில் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் சிவசேனா, ஆட்சியமைக்குமா? அல்லது அப்படியே அமைத்தாலும் பெரும்பான்மையை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.