பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வேறு செலவு : மகாராஷ்டிர அரசு ஒப்புதல்

மும்பை

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வேறு செலவுகள் செய்ததை மகாராஷ்டிர அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 2015 ஆம் வருடம் பேரிடர் நிவாரண நிதி என ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் 75% மத்திய அரசும் 25% மாநில அரசும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்தத் தொகை பேரிடருக்கான நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும்.

அவ்வாறு செலவிடாமல் மீறும் தொகையை அரசு நிதியில் அல்லது தேசிய வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு அந்த வட்டித் தொகையை பேரிடர் நிவாரண நிதிக்கு உபயோகிக்க வேண்டும் என்பது இந்நிதியின் விதிமுறை ஆகும். இந்த நிதி ஒவ்வொரு மாநிலத்துக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மொத்தமுள்ள 358 தாலுக்காக்களில் 180 அஒ வரட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தது. அதனால் இந்த தாலுகாக்களுக்கு அரசு ரூ. 6000 லிருந்து ரூ. 7000 கோடி வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அவ்வளவு தொகை செலவிடப்படவில்லை என புகார் எழுந்தது.

அதனால் மும்பை உயர்நீதிமன்றத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆர்வலர் ஒரு வர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் இதுவரை பேரிடர் நிவாரணத்துக்காக செலவிடப்பட்ட நிதி விவரங்களின் கணக்கு பற்றி கேட்கப்பட்டிருந்தது. அந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் மகாராஷ்டிர அரசுக்கு அனுப்பி வைத்தது. அரசு அதற்கான பதில் மனுவை உயர்நீதிமன்றத்துக்கு அளித்துள்ளது.

மகாராஷ்டிர அரசு, “இதுவரை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1717 கோடி நிதியை பெற்றுள்ளோம். ஆனால் கடந்த 2015 முதல் எந்த ஒரு பேரிடரும் நடக்காததால் அந்த தொகையை வேறு செலவுக்கு உபயோகப்படுத்திக் கொண்டோம். அத்துடன் இந்த நிதிக்கான கணக்குகள் எதுவும் அரசிடம் கிடையாது” என அதிர்ச்சி அளிக்கும் பதிலை கொடுத்துள்ளது.