மும்பை

முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ராஜ் தாக்கரே உள்ளிட்ட 11  தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு குறைத்துள்ளது.

சமூக விரோதிகள் மற்றும் பயங்கர வாதிகளின் அச்சுறுத்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் சில அதிகாரிகளுக்கு அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது.  அரசியல் தலைவர்கள் பலருக்கும் அச்சுறுத்தலின் அடிப்படையில் இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என்னும் வகையில் பாதுகாப்புகள் அளிக்கப்படுகின்றன.  இந்த பாதுகாப்பு முன்னாள் முதல்வர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.

இவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அவரது குடும்பத்தினர், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே, முன்னாள் உபி ஆளுநர் ராம் நாயக் உள்ளிட பலருடைய பாதுகாப்பை மகாராஷ்டிர அரசு குறைத்துள்ளது.  இந்த விவரங்கள் பின் வருமாறு :

முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசின் பாதுகாப்பு இசட் பிளசில் இருந்து ஒய் பிளசாக குறைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி அம்ருதா, மகள் தீவிஜாவுக்கு வழங்கப்பட்ட ஒய் பிளஸ் பாதுகாப்பு எக்ஸ் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.  தவிர உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் ராம் நாயக்கின் பாதுகாப்பு ஒய் பிளசில் இருந்து ஒய் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அது ஒய் பிளசாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில லோக் ஆயுக்தா நீதிபதி எம்.எல். தகிலியானிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இசட் பிரிவில் இருந்து ஒய் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.  இதைத் தவிர மத்திய அமைச்சர்கள் ராவ்சாகேப் தான்வே, ராம்தாஸ் அத்வாலே, முன்னாள் மாநில மந்திரி ஆஷிஸ் செலார் ஆகியோருக்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த பாட்டீல், முன்னாள் அமைச்சர்கள் சுதீர் முங்கண்டிவார், ராஜ்குமார் படோலே, பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் பிரசாத் லாட், ராம் கதம், ஹரிபாவு பாக்டே ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதுகாப்பில் மாறுதல் செய்யப்பட்டதற்கு அரசியல் விரோதமே காரணம் என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.  இதே கருத்தை பல எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், “அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டும் பாதுகாப்பை 5 மூத்த உயர் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து தற்போதைய அச்சுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த பாஜக ஆட்சியில் கூட சரத் பவார் மற்றும் அஜித்  பலருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.