வீட்டு மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு ரூ.35000 கோடி அரசு ஒப்பந்தம்

மும்பை

னது வீட்டு மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு மகாராஷ்டிரா அரசு ரூ. 35000 கோடி ஒப்பந்தம் அறிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த அமோல் யாதவ் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமானியாக பணி ஆற்றியவர்.   இவர் தனது சிறுவயதில் இருந்தே விமானத் துறையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.    இந்தத் துறையில் சாதனைகள் புரிய வேண்டும் என்பதே அவருடைய நீண்ட நாள் கனவாக இருந்தது.    இதற்காக அவர் த்ரஸ்ட் ஏர்கிராஃப்ட் கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை கடந்த 2010 ஆம் ஆண்டு துவக்கினார்.

தனது வீட்டு மொட்டை மாடியிலேயே சிறிய ரக விமானம் ஒன்றை ஆரம்பிக்கத் தொடங்கினார்.  சுமார் ஆறு ஆண்டுகள் முயன்று ஒரு சிறு விமானம் ஒன்றி அவர் உருவாக்கினார்.  ஆறு பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.   இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்த விமானத்துக்கு சான்றிதழ் அளித்தது.   அதன் பிறகு இந்த சிறிய ரக விமானம் வானில் பறக்க மத்திய அரசின் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியது.

மகாராஷ்டிரா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மகாராஷ்டிரா அரசு  விமானம் தயாரிக்க ரூ.35000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கி உள்ளது.   ஒப்பந்தத்தின்  பகுதியாக அமோல் யாதவுக்கு மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் 157 ஏக்கர் பரப்பளவு இடத்தை அரசு வழங்கி உள்ளது.  இங்கு அவர் 19 பேர் பயணிக்கும் 1300 சிறிய ரக விமானங்களை தனது த்ரஸ்ட் ஏர்கிராஃப்ட் கம்பெனி நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார்.

அமோல் யாதவ் தனது விமானத்துக்கு VT – NMD  எனப் பெயர் சூட்டி உள்ளார்.   இதில் என் எம் என்பது பிரதமர் நரேந்திர மோடியையும் டி என்பது மராட்டிய முதல்வர் தேவேந்திர ஃபடனாவிஸ் என்பதையும் குறிக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.   அமோல் தொடங்க உள்ள விமானம் அமைக்கும் தொழிற்சாலை மூலம் சுமார் 10000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

மேக் இன் இந்தியா என புகழப்படும் இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் விமான தயாரிப்பில் இறங்கி உள்ள முதல் மாநிலம் என்னும் பெயர் மகாராஷ்டிராவுக்கு கிடைத்துள்ளது.