மும்பை

மும்பையில் கொரோனா சிகிச்சை அளிக்க 50 கேரள மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களுக்கு மகாராஷ்டிர அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.  இம்மாநிலத்தில் இதுவரை 50,321 ஏர் பாதிக்கப்பட்டு 1635 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதைப் போல் இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிப்பு அடைந்த மாநகராட்சிகளில் மும்பை முதல் இடத்தில் உள்ளது  இங்கு 30,542 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 988 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் மும்பை நகரில் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததே ஆகும்.   எனவே இந்த எண்ணிக்கையை அதிகரிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது.   நாட்டில் முதல் முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாநிலமான கேரளாவில் கொரோனா ஒழிப்பு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.  கடந்த பல நாட்களாகக் கேரளா கொரோனா பாதிப்பற்ற மாநிலமாக இருந்து வந்தது.

இதையொட்டி மகாராஷ்டிர அரசு 50 கேரள மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களுக்கு மும்பை நகரில் கொரோனா சிகிச்சை அளிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.   இந்த மருத்துவர்களில் எம் பி பி எஸ் படித்தோருக்கு மாதம் ரூ.80000 மற்றும் எம் டி அல்லது எம் எஸ் படித்தோருக்கு ரூ.2 லட்சம் ஊதியம் அளிக்க அரசு முன் வந்துள்ளது.  செவிலியர்களுக்கு ரூ.30000 மாத வருமானம் அளிக்க உள்ளது. இதைத் தவிரத் தங்குமிடம், உணவு, மருத்துவச் செலவுகள், மற்றும் பி பி இ உடைகள் ஆகியவற்றை அரசு அளிக்க உள்ளது.