Random image

ஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு

மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் ஜாதி அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்டிர அரசு தீர்மானம் இயற்றி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு ஜாதி அடிப்படையிலான பெயர்கள் இடப்பட்டுள்ளன.  உதாரணமாக, மகர் வாடா, புத்த வாடா, மங்க் வாடா, தோர் வாட, பிராமண் வாடா, மாலி கலி என பல பெயர்கள் உள்ளன.   முன்பு  இந்த பகுதிகளில் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் வசித்ததால் இந்த பெயர்கள் இடப்பட்டுள்ளன.  தற்போது அனைத்து சாதியினரும் இந்த இடங்களில் வசிக்கின்றனர்.

இதையொட்டி மகாராஷ்டிர முதல்வர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முன்பு ஜாதிவாரியாக ஒவ்வொரு பகுதியில் அந்தந்த இனத்தவர் வசித்து வந்தனர்.   ஆனால் தற்போது நிலை மாறி உள்ளது.  மகாராஷ்டிரா போன்ற முன்னேறி வரும் மாநிலங்களில் இது போன்ற ஜாதி அடிப்படையிலான குடியிருப்பு பெயர்கள் பொருத்தமற்றதாக உள்ளன.

பல குடியிருப்புக்களின் பெயர்கள் தலித்துகள், புத்த மத தலித்துக்கள், இறந்த விலங்களை அப்புறப்படுத்துவோர், தோட்டக்காரர்கள் என உள்ளன.    எனவே இந்த பகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு சமதா நகர், பீம் நகர, ஜோதி நகர், ஷாகுன் நகர், கிரந்தி நகர் என பெயரிடப்பட உள்ளன.” என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சமுகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, “இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். நாங்கள் சாதி அமைப்பை படிப்படியாக ஒழிக்க விரும்புகிறோம்.   இங்கு அனைவருக்கும் மரியாதையுடன் வாழ உரிமை உள்ளது.  யாரையும் ஜாதி அல்லது மதத்தை வைத்து குறைத்து மதிப்பிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.