மும்பை:

முட்டாள் தினமான ஏப்ரல் 1ந்தேதி (நாளை)  ‘முட்டாள் தனமாக’ வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. அங்கு இதுவரை  1,071 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது. அவர்களுக்கு வேண்டிய உணவு, புகலிடம் செய்து தரப்பட்டு உள்ளது, அவர்கள்  இங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படவில்லை. இங்கேயே தங்கியிருக்க வேண்டும்.

நாளை ஏப்ரல் 1-ம் தேதி, முட்டாள்கள் தினம். இந்த சூழ்நிலையில் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என ஒவ்வொருவரிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். அப்படியும் மீறி வதந்தி பரப்பும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.