டெல்லி: மத்திய அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிசார்கா என்ற புயல் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடலை ஒட்டி குறைந்த அழுத்தப் பகுதி உருவாகி உள்ளதாகவும், அதன் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சூறாவளிக்கு முந்தைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு தீவிரமடைந்து நிசார்கா என்ற புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த குறைந்த அழுத்த பகுதி இன்று காலை 5.30 மணியளவில் உருவானது, படிப்படியாக ஒரு சூறாவளியாக மாறுவதற்கான அனைத்து சாதகமான காலநிலை அம்சங்கள் உள்ளன என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.
இந்த புயல் ஒரு முறை உருவான பிறகு, வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர், வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடற்பகுதிக்கு ஜூன் 3ம் தேதி சென்றடையும்.
இதன் தாக்கத்தால் லேசானது முதல் மிதமானது மழையானது லட்சத்தீவுகள், கேரளா, கடலோர கர்நாடகா பகுதிகளில் மே 31 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் பெய்யும்.  கன மழை, அதி தீவிர மழையாது தெற்கு குஜராத், வடக்கு கொங்கன், மத்திய மகாராஷ்டிரா, டாமன், டையூ, தாத்ரா நகர் ஹவேலி பகுதிகளில் வரும் 3 அல்லது 4 தேதிகளில் பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மைய அதிகாரி சுனிதா தேவி கூறி இருப்பதாவது: சூறாவளியானது தீவிரமடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏன் என்றால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாகவும், கடல் வெப்ப ஆற்றலும் அதிகமாக உள்ளது. எனவே மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும். சூறாவளியின் தீவிரத்தை இப்போதே கணிக்க முடியாது என்று கூறினார்.