மும்பை

காராஷ்டிர மாநிலம் இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிப்பு அடைந்த 8 ஆவது மாநிலம் ஆகி உள்ளது.

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது.  குளிர்காலங்களில் வெளி நாடுகளில் இருந்து வரும் பறவைகளால் இந்த காய்ச்சல் பரவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆயிரக்கணக்கான பறவைகள் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் கோழி மற்றும் முட்டை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,.

இந்த பாதிப்பு இதுவரை இந்தியாவில் 7 மாநிலங்களில் காணப்பட்டது.  கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  அங்குக் கோழிகள் உள்ளிட்ட பல பறவைகள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டு வருகின்றன.  அம்மாநில அரசு பாதிக்கப்பட்ட ப் பண்ணை உரிமையாளர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவித்துள்ளது.

தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  இது இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிப்பு அடைந்த எட்டாம் மாநிலம் ஆகும்.   இந்த பாதிப்பு பர்பானியில் தொடங்கி உள்ளது. இங்கு 800 பெட்டைக் கோழிகள் இரு நாட்களில் மரணம் அடைந்துள்ளது.  அவற்றைச் சோதித்ததில் பறவைக் காய்ச்சல் பரவல் தெரிய வந்துள்ளது.

இந்த பகுதி மும்பை நகரில் இருந்து சுமார் 500 கிமீ தூரத்தில் உள்ளதாகும்.  இந்த பாதிப்பு அடுத்ததாக முரும்பா என்னும் பகுதியிலும் பரவி உள்ளது.  இங்குள்ள 8 பறவைப் பண்ணைகளில் சுமார் 8000க்கும் அதிகமான பறவைகள் உள்ளன.  பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க இங்குள்ள பறவைகளைக் கொன்று புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.