மகாராஷ்டிரா : சிறையில் உள்ள 56 விவசாயிகள் கடன் தள்ளுபடி

நாக்பூர்

சிறையில் உள்ள 56 விவசாயிகளின் கடனை மகாராஷ்டிர அரசு தள்ளுபடி செய்துள்ளது.

மகாராஷ்டிர அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.   அதற்கு ஒரு சில வரைமுறைகளையும் விதித்தது.    ஆனால் விவசாயிகளில் சிலர் நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.   அவர்களுக்கு இந்த விவசாயக் கடன் குறித்து ஏதும் தெரியாமல் இருந்தது.   இவர்களில் ஒரு சிலர் தண்டனை பெற்றவர்கள், மற்றவர்கள் விசாரணைக் கைதிகள் ஆவார்கள்.

நாக்பூர் சிறையில் உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில் மும்பை புறநகர்  ஆட்சியர் சச்சின் சிறையில் ஒரு ஆய்வை நடத்தினார்.   அப்போது அவர் அனைத்துக் கைதிகளுடனும் தனித்தனியாக உரையாடினார்.  உரையாடலின் போது கைதிகளில் சில விவசாயிகள் உள்ளது தெரிய வந்தது.

உடனடியாக அந்தக் கைதிகளை கடன் தள்ளுபடி கோரி ஆன்லைனில் ஆட்சியர் மனு செய்ய வைத்தார்.   இதே போல் நாசிக் சிறையில் உள்ளவர்கலும் மனு செய்தனர்.   இவ்வாறு மனு அளித்த 88 பேரில் 32 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  மீதமுள்ள 56  பேரின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இது குறித்து கைதிகள் தங்கள் நன்றியை ஆட்சியர் சச்சினுக்கு தெரிவித்துள்ளனர்.     விவசாய ஆர்வலர்களும் தங்கள் நன்றியை ஆட்சியருக்கு நேரில் தெரிவித்துள்ளனர்.