மகாராஷ்டிரா பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வெற்றி….கொள்முதல் விலை உயர்வு

--

மும்பை:

மகாராஷ்டிராவில் கோலாப்பூர், சங்லி, சட்டாரா, புனே ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பால் உற்பத்தி நடைபெறுகிறது. மேலும், அஹமத்நகர், நாசிக், ஜலகோன், நாண்டெட் மற்றும் பர்பானி மாவட்ட மக்களும் கறவை மாடு வளர்ப்பு, பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். .

பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் 17 ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. பின்னர், பதப்படுத்தி, குளிரூட்டி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில. லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த 3 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பல லட்சம் லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று உத்தரவிட்டார். 1 லிட்டர் பாலின் குறைந்தபட்ச விலை ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்துள்ளனர்.