பொது நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாததால் தானாகவே முன் வந்து அபராதம் செலுத்திய அமைச்சர்..

 

மும்பை :

காராஷ்டிர மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர், தத்தாத்தரே பர்னே. இவர் இந்தாப்பூர் தாலுகாவில் உள்ள கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு திரண்டிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது அமைச்சர் பர்னேயின் முகத்தில் இருந்த முகக்கவசம் அவிழ்ந்து விழுந்தது.

இதனை அவர் கவனிக்காமல் “கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம்” என்று கூறி விட்டு, பேச்சை தொடர்ந்தார்.

அமைச்சர் அருகில் நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், ‘’தலைவரே! நீங்கள் ‘மாஸ்க்’ போடாமல் இதனை பேசிக்கொண்டிருக்கிறீர்கள்’’ என சொல்ல, பர்னே பதறிப்போனார்.

ஏன்?

முகக்கவசம் அணியாமல், “கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கடை பிடிக்க வேண்டும்” என அமைச்சர் பேசும் போது, அதனை ஊடகங்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தன. ஏராளமான செய்தியாளர்களும் அங்கு திரண்டிருந்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சை ஆகி விடும் என நினைத்த அமைச்சர் பர்னே மேடையில் இருந்து இறங்கியதும், அந்த பகுதி பஞ்சாயத்து ஊழியர்களை அழைத்தார்.

நூறு ரூபாயை அவர்களிடம் கொடுத்து, “நான் முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பேசி விட்டேன். இதோ அபராதம்” என அவர்களிடம் சொல்லி, மறக்காமல் அபராதம் கட்டியதற்கான ரசீதையும் வாங்கி கொண்டார்.

– பா.பாரதி