மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் கொண்டு மெத்தைகள் தயாரிப்பு: தீயிட்டு அழித்த போலீசார்

ஜல்கான்: மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை பரவி வரும் நிலையில், முகக்கவசமும், சமூக இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. பயன்படுத்தப்பட்ட முகக்கவசம்  மூலம் கொரோனா பரவும் என்பதால் அவற்றை உரிய பாதுகாப்புடன் அப்புறப்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஆலையில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் கொண்டு மெத்தைகள் தயாரிக்கப்பட்டுள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குசம்பா என்ற கிராமத்தில் இந்த மெத்தை தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது.

சம்பவம் தொடர்பாக, ஆலைக்கே சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை தீயிட்டு அழித்தனர். மெத்தை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அம்ஜ்த் அகமது மன்சூரி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், நோய் பரப்பும் கிருமிகள் கொண்ட முகக்கவசங்களை மெத்தை தயாரிப்புக்கு பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.