மகாராஷ்டிராவில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா உறுதி: பலி எண்ணிக்கையும் 139 ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகம் காணப்படுகிறது.  மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என அனைத்து துறையினருக்கும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான களத்தில் போராடும்  காவல்துறையினரும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில், மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 120 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த மாநில காவல்துறை வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை மட்டும் 13,716 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காவலர் ஒருவர் பலியாகி உள்ளார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 11,049 காவலர்கள் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர்.