சாலை பள்ளத்தில் விழுந்து இறந்ததற்கு அரசை குற்றம் சொல்லக்கூடாது: மகாராஷ்டிர அமைச்சர்

மும்பை:

சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து  இறந்ததற்கு அரசு காரணம் அல்ல, அரசை குற்றம் சொல்லக்கூடாது  என்று  மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித்துறை  அமைச்சர் கூறி உள்ளார்.

மும்பையில் சமீப காலமாக செய்து வரும் மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன.  சாலையில் உள்ள நிரப்பப்படாத குழிகள், மூடப்படாத சாக்கடைகளால், மழைக்காலத்தில் நீர் தேங்கி பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இரு சக்கர வாகனத்தில் சாலையில்  பயணம் செய்பவர்கள் ஏராளமானோர் குழிகளுக்குள் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். கடந்த 2 வாரங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகள் காரணமாக  5 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாலையில் உள்ள பள்ளங்களால் விபத்துக்கள் ஏற்படுவதைக் கண்டித்தும்,  சாலையை செப்பனிடக்கோரியும்,  எம்.என்.எஸ்., தொண்டர்கள் எனக் கூறி சிலர் பொதுப் பணித்துறை அலுவலகத்தை சூறையாடினர். அங்குள்ள  நாற்காலி, கணினி போன்ற வற்றையும் அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான சந்திரகாந்த் பட்டீல், குழிகளுக்குள் விழுந்து இறந்ததற்கு  மாநில அரசு காரண மல்ல என்று கூறி உள்ளார்.

மும்பை பகுதியில் 19 சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், அவை செப்பனிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், ஒரு விபத்து குறித்து கேள்வி எழுப்புபவர்கள்ர, ஒரே சாலையில் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேர் பயணிக்கிறோம் என்பதை மறந்த விடுகிறார்கள் என்றும் கூறினார்.

மக்கள் அவ்வப்போது தங்களது கருத்துக்களை மாற்றுவார்கள், சில நேரங்களில் அரசுக்கு ஆதரவாகவும், சில நேரங்களில் எதிர்மறையாகவும் பேசுவார்கள் என்ற அமைச்சர், சமூக வலைதள ஊடகங்கள் மாநில அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றும் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த பேச்சு மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

You may have missed