மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்துவரும் உத்தவ்தாக்கரே தலைமையிலான மாநில அரசு அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.

கொரோனா பரவலில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருந்து வருகிறது.  தடுப்பு நடவடிக்கையில், மகாராஷ்டிரா மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், அரசு மீது குற்றம் சாட்டுபவர்களை, உத்தவ் தாக்கரே, தனது கட்சியினரை வைத்து மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நடிகர் சுஷாந்த்சித் தற்கொலை விவகாரத்தில், உத்தவ் தாக்கரே மகனுக்கும் தொடர்பு இருப்பதாக அரசல்புரசலாக தகவல் வெளியானது.  இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குற்கு நடிகை கங்கனா ரனாத் கூறிய, மும்பை மினி பாகிஸ்தான் என்ற குற்றச்சாட்டு மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

இதையடுத்து, கங்கனாவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்த சிவசேனாஎம்.பி. சஞ்சய்ராவத்,  அவர் மும்பைக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று கூறிய நிலையில், அவரது வீட்டையும் இடித்து தள்ளியது.

மாநிலஅரசின் அராஜகம் எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கவோ, கண்டனம் தெரிவிக்கவோ, பிரதமர் மோடி முதல், ராகுல்காந்தி வரை ஒருவரும்  முன்வரவில்லை.

இந்த நிலையில், உத்தவ்தாக்கரே அரசின் அராஜகம் குறித்து,  மும்பையிலுள்ள கன்டிவலி கிழக்கு பகுதியைச் சேர்ந்த கடற்படை முன்னாள் அதிகாரியான  மதன் சர்மா (65).  முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்த கார்ட்டூன்  வரைந்து, அதை வாட்ஸ்அப் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அவர்மீது சிவசேனை குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அவரது கண் பலத்தபாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.  தான் தாக்கப்பட்டது தொடர்பாக  மதன்சர்மா  சாம்டா நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.

இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தாக்கப்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

இந்த நிலையில், சிவசேனா அரசுமீது குறைகூறும் லோக்கல் டிவி சேனல்களுக்கும் சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மாநில அரசை குறை கூறும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அச்சுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டென்நெட்வொர்க்ஸ், ஹாத்வே, இன்கேபிள் நெட், ஜிடிபிஎல், ஜேபிஆர் நெட்வொர்க், பிஆர்டிஎஸ் நெட் வொர்க், உள்ளிட்ட கேபிள் நிறுவனங்களுக்கு ஷிவ்கேபிள் சேனா கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ள ரிபப்ளிக் டிவி ‘மீடியா ட்ரையல்’ நடத்தி வருகிறது, இதனால், ரிபப்ளிக் டிவி  சேனலை கேபிள் ஆபரேட்டர்கள் ஒளிபரப்பக் கூடாது என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு சிவசேனா அரசு வாய்மொழியாகவும்  உத்தரவிட்டுள்ளது. மீறினால்  சிவசேனா கட்சி  போராட்டம் (தாக்குதல்) நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல சமூக வலைதளங்களில், மாநிலஅரசுமீதோ, சிவசேனா தலைவர்கள் குறித்தோ குற்றம் சாட்டி கருத்துக்களோ, காட்டூன்களோ வெளியிட்டால், அவர்களின் முகவரிகள் கண்டறியப்பட்டு, மிரட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மாநில சிவசேனா அரசின் அராஜகம், எல்லைமீறிப் போய்க்கொண்டிருப்பதாக, அங்குள்ள ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலகளும் கிசுகிசுத்து வருகின்றனர். ஆனால், அதை வெளிப்படையாக கூறினால், தங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பயந்து நடுங்குகிறார்கள்.