மும்பை: மகாராஷ்டிராவில் மாநிலம் முழுவதும் விவசாயிகள் கலந்து கொண்ட அணிவகுப்பு மும்பையில் நிறைவடைந்தது.

டெல்லியில் ஒரு பக்கம் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்க, அதே கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிராவிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்ட இந்த அணிவகுப்பு மும்பையில் முடிவடைந்ததது. நகரில் ஆசாத் மைதானத்தில் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினர். மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் நானா படோல் 73 வயதான விவசாயி யமுனாபாய்க்கு தேசியக் கொடியை அவிழ்க்க உதவினார்.

போராட்டம் குறித்து சம்யுக் ஷெட்கரி கம்கார் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளர் அஜித் நவாலே கூறியதாவது: மும்பை கிளர்ச்சியானது, டெல்லி எல்லைகளில் கிளர்ச்சியில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது.

நாங்கள் அவர்களுக்குப் பின்னால் உறுதியாக இருக்கிறோம். இந்த பிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் வரை ஓய மாட்டோம். மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி போராடும் விவசாயிகளை சந்திக்காதது ஏமாற்றம் தருவதாக உள்ளது என்று கூறினார்.