மும்பை:

காராஷ்டிரா  மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு, பாஜக சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கி உள்ளது. அங்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்ற நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

இங்குள்ள  வோர்லி தொகுதியில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் இன்று தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையொட்டி சிவசேனா கட்சி அலுவலகம் இருக்கும் மும்பையின் லோயர் பரேல் பகுதியிலிருந்து வோர்லி வரை அக்கட்சி சார்பில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் திறந்த ஜீப்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆதித்ய தாக்கரே சென்றார். வழிநெடுகிலும் ஆதித்ய தாக்கரேயை சிவசேனா கட்சியினர் வாழ்த்தி கோஷமிட்டபடி இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்யா தாக்கரே,  புதிய மகாராஷ்டிரத்தை உருவாக்குவதுதான் தமது குறிக்கோள் என்றார்.

பால்தாக்கரேயால் சிவசேனா கட்சி உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகாலத்தில் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.