மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் விமானச் சேவை செய்ய அனுமதிப்பது மிகவும் தவறான செயலாகும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு நான்காம் கட்டமாக அமலில் உள்ளது.  ஆயினும் பல மாநிலங்களில் கொரோனா பரவுதல் கட்டுக்குள் வராமல் உள்ளது.  பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் மத்திய விமானத்துறை அமைச்சர் நாளை முதல் உள்நாட்டு விமான போக்குவரத்தைத் தொடங்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

விமானச் சேவைக்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி அளிக்கத் தமிழகம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதாலும் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புடன் அம்பன் புயல் பாதிப்பும் சேர்ந்துள்ளதாலும் விமானச்சேவையை இம்மாநிலங்களுக்கு அளிக்க வேண்டாம் என அறிவிக்கபட்டுள்ள்து.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலமும் விமானச் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   இது குறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது டிவிட்டரில், “சிவப்பு மண்டலத்தில் உள்ள  பகுதிகளில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது மோசமான அறிவுறுத்தலாகும்.

பயணிகளின் உடல் வெப்பநிலை சோதனை மட்டும் போதுமானது இல்லை.  தற்போது ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகளை இயக்குவது சாத்தியம் இல்லை.   கொரோனா உள்ளோர் பயணம் செய்வதை அனுமதிப்பது சிவப்பு மண்டலத்தை மேலும் அபாயத்துக்கு உள்ளாக்குவதாகும்” என பதிந்துள்ளார்.