வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி செல்ல தயாராகும் மகாராஷ்டிரா விவசாயிகள்…. ரிலையன்ஸ்க்கு எதிராகவும் போர்க்கொடி…

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள்  டெல்லிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.  22ந்தேதி,  மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்

மோடி அரசு அறிமுகப்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் நாடு முழுவதும் விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று 24வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில்,  மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சேர்ந்து போராட தயாராகி வருகின்றனர்.  டிசம்பர் 21ந்தேதி நாசிக்கில் இருந்து போராட்ட அணிவகுப்பு தொடங்குவதாக விவசாய சங்கத்தின் தெரிவித்து உள்ளனர்.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையின்கீழ் -250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள் தற்போது தலைநகரில் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. இந்த அணிகளுடன் மகாராஷ்டிராவில் இருந்து செல்லும் விவசாயிகளும் இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக,  அகில இந்திய கிசான் சபாவின் மகாராஷ்டிரா பிரிவின் செயலாளர் டாக்டர் அஜித் நவாலே  தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே, நாசிக் முதல் மும்பை வரை விவசாயிகளின் அணிவகுப்பு மகாராஷ்டிராவில் அப்போதைய பாரதிய ஜனதா அரசாங்கத்தின் ஆணவத்தை வீழ்த்தியது. இப்போது, ​​மோடி அரசாங்கத்திற்கான நேரம் இது. இந்திய வரலாற்றில் வேறு எந்தவொரு, அரசாங்கமும் விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி  அவர்களை கண்ணீர் வடிக்கவிட்டதில்லை. தற்போது, குளிர்காலத்தின் நடுப்பகுதி. இருந்தாலும், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசின் தந்திரங்கள் தோல்வி அடைந்துள்ளன என்று அஜித் நவாலே குற்றம் சாட்டி உள்ளார்.

முதல் கட்டத்தில் சுமார் 20,000 விவசாயிகள் அணிவகுப்பில் சேருவார்கள் என்று  தெரிவித்துள்ள நவாலே, விவசாயிகளை அணிதிரட்டுவதில் அகில இந்திய கிஷான் சங்கம் முன்னிலை வகிப்பதாகவும், தங்களுடன்  பிற அமைப்புகளும்  சேரத் திட்டமிட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஸ்வாபிமானி ஷெட்கரி சங்கதான உறுப்பினர்கள் டிசம்பர் 22 ம் தேதி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அலுவலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஜான் அந்தோலனாச்சி சங்கர்ஷ் சமிதி (ஜாஸ்)  அமைப்பு தெரிவித்துஉள்ளது.