மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாவது குறித்து 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன.  அதே வேளையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாமல் உள்ளது.  நேற்று 5700க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மொத்தம் 17,74,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.  அகில இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.

இது குறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார், “தீபாவளியை முன்னிட்டு மாநிலத்தில் மக்கள் அதிக அளவில் கூடி உள்ளனர்.   ஏற்கனவே விநாயக சதுர்த்தி நேரத்திலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.  எனவே நாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி வருகிறோம்.   கொரோனா தாக்குதலின் இரண்டாம் அலை உண்டாகும் என ஊகங்கள் நிலவி வருகின்றன.

அரசு இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம்.  விரைவில் மீண்டும் ஊரடங்கு அமலாவது குறித்து 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு எடுக்கப்படும்.   பள்ளிகளைத் திறப்பது குறித்தும் அரசு பல விதிமுறைகளை அறிவிக்க உள்ளது.  அது குறித்தும் விரைவில் முடிவு எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.