மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில்  நாளை (மார்ச் 28ஆம் தேதி)  முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கொரோனா பரவலில் இரண்டாவது அலை என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.  கொரோனா பரவலில்  மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில்  முன்னணியில் உள்ளன. நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்திற்கும் மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.

இதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல மாவட்டங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று (26ந்தேதி)  முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,  மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மார்ச் 28 இரவு முதல் மகாராஷ்டிரத்தில் இரவுநேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் வேகத்தின் அடிப்படையில் மாநில அரசுகளே பொதுமுடக்க விதிகள் குறித்த உத்தரவை பிறப்பித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.