நாக்பூர்

காராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் ராஷ்டிரசந்த் துகாதோஜி மகராஜ் பல்கலைக் கழகத்தில் சரித்திர இளங்கலை படிப்பில் ஆர் எஸ் எஸ் குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த நாக்பூரில் ராஷ்டிரசந்த் துகாதோஜி மகராஜ் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பல இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன.  இப்பல்கலைக்கழகத்தின் சரித்திர பாட வரிசையில் உள்ள படிப்புக்களில் பல தற்கால நிகழ்வுகள் சேர்க்கப்படுகின்றன.

அவ்வாறு சமீபத்தில் இளங்கலை (சரித்திரம்) படிப்பின் இரண்டாம் வருடம் நான்காம் செமஸ்டரில் பல புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் முதல் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தோற்றம் மற்றும் ஜவகர்லால் நேரு பற்றியும் அதன் இரண்டாம் பகுதியில் ஒத்துழையாமை இயக்கம் குறித்தும் உள்ளது.  மூன்றாம் பகுதியில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின்  தொடக்கம், அந்த இயக்கம் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே முதுகலை சரித்திரத்தில் கடந்த 2003-04 ஆம் வருடத்தில் ஆர் எஸ் எஸ் குரித்த ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டது. தற்போது இளங்கலையில் ஒரு பகுதி ஆர் எஸ் எஸ் சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பாட ஆணைய உறுப்பினர் சதீஷ் சாப்லே, “மாணவர்கள் சரித்திரத்தில் சமீப காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து அறிய இந்த பிரிவு இணைக்கப்பட்டுள்ள்து. அத்துடன் மார்க்சிசம் போன்ற புது வரவுகளும் இணைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் தனது டிவிட்டரில், “நாக்பூர் பல்கலைக்கழகத்துக்கு ஆர் எஸ் எஸ் செய்த நாட்டுப்பணி குறித்த விவரங்கள் எங்கிருந்து கிடைக்கும்? அந்த இயக்கம் ஆங்கிலேயருடன் ஒற்றுமையுடன் இருந்தது. சுதந்திர போராட்டத்தை எதிர்த்தது. சுமார் 52 வருடங்கள் நமது மூவர்ணக் கொடியை தீண்டத் தகாததாக ஆர் எஸ் எஸ் கருதியது. அத்துடன் நமது அரசியலமைப்பு சட்டத்தை ஒப்புக் கொள்ளாமல் மனுஸ்ம்ரிதியை கொண்டாடியது.” என பதிந்துள்ளார்.