மகாராஷ்டிராவுக்கு சிவசேனா கட்சி முதல்வர் வருவது உறுதி : சஞ்சய் ரவுத்

மும்பை

காராஷ்டிரா மாநிலத்துக்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராக வருவது உறுதி என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா இடையே முதல்வர் பதவி குறித்த இழுபறி நீடித்து வருகிறது.  சிவசேனாவின் திட்டமான இரு கட்சிகளுக்கும் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி என்பதை பாஜக ஏற்கவில்லை.  அக்கட்சிக்குத் துணை முதல்வர்  பதவியை பாஜக அளித்ததை சிவசேனா ஏற்கவில்லை.

தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் திடீர் என சந்தித்தார்.   அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் மூவர் பவாரை சந்தித்துள்ளனர்.   அவர்கள் மூவரும் தற்போது சோனியாவைக் காண விமானம் மூலம் டில்லி சென்றுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் ரவுத் மகாராஷ்டிர மாநிலத்துக்கு சிவசேனா கட்சியை சேர்ந்தவர் முதல்வராக வருவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் பாஜக மற்றும் சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை என அவர் கூறி உள்ளார்.