மகாராஷ்டிராவில் முத்ரா கடன்களில் ரூ.25,000 கோடி ஊழல்..? பட்னாவிஸ் அரசை கேள்வி கேட்கும் என்சிபி

டெல்லி: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் காலத்தில் விநியோகிக்கப்பட்ட ரூ .25,742 கோடி மதிப்புள்ள முத்ரா கடன்களின் நம்பகத்தன்மை குறித்து என்சிபி கேள்வி எழுப்பி இருக்கிறது.

மகாராஷ்டிரா சட்டசபையில் பொருளாதார கணக்கெடுப்பு தாக்கல் செய்யப்பட்டது. அந்த கணக்கெடுப்பின்படி, 2018-19ம் ஆண்டில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ .25,742 கோடி கடன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில், இந்த கடன்கள் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை இருப்பது குறித்து சிவசேனா,என்சிபி,காங்கிரஸ் அரசு கேள்வி எழுப்பியது. இது குறித்து என்சிபி தலைவரும், திறன் மேம்பாட்டு அமைச்சருமான நவாப் மாலிக் கூறியதாவது:

இந்த பயனாளிகளின் தரவு எங்கே? பயனடைந்தவர்கள் மற்றும் அவர்களில் எத்தனை பேர் பணத்தை சரியான பயன்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்? இந்தத் தரவு மாநில வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்காக அளிக்கப்பட வில்லை.

உண்மையில் பணம் தேவைப்படும் நபர்கள் பயனடைந்தார்களா என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்? அல்லது அரசு தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு லஞ்சமாக விநியோகிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக முற்றிலும் மறுத்திருக்கிறது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளரும் எம்எல்ஏ ராம் கதாம் கூறி இருப்பதாவது: முத்ரா திட்டம் நேரடியாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது.

முழு தரவுகளும் அவர்களிடம் வெளிப்படையாக பராமரிக்கப்படுகின்றன. இது நியாயமற்ற குற்றச்சாட்டு. யாருக்கும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு பதிலாக மத்திய நிதி அமைச்சகத்தை அணுகலாம் என்ற கூறியிருக்கிறார்.

முன்னதாக, 2019ம் ஆண்டின் போது நடைபெற்ற கூட்டங்களில், மகாராஷ்டிராவின் கூடுதல் தலைமைச் செயலாளர், மாநிலத்தில் முத்ரா கடன்களின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்திருந்தார். கடன் வாங்குபவர் வாரியான தரவை மாநில அரசு தேவைப்படும்போதும் வழங்கும்படியும் வங்கியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.