மும்பை :

காராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வந்த குழப்பங்கள் முடிவடைந்து, இன்று மாலை மாநில முதல்வர் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.  இந்த நிலையில், துணைமுதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அஜித்பவார் மீண்டும் துணைமுதல்வராகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு மாதமாக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படாத நிலையில், கடந்த சனிக்கிழமை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக திடீரென ஆட்சி அமைத்தது.  முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணைமுதல்வராக என்சிபி கட்சித் தலைவர் அஜித்பவாரும் பதவி ஏற்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கிடையில்,  தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் சரத்வாரிடமே திரும்பி விட்ட நிலையில், உச்சநீதி மன்றமும், அதிரடி உத்தரவை பிறப்பித்ததால், முதல்வரும், துணைமுதல்வரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில், சிவசேனா தலைமையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்து, கவர்னரை சந்தித்து தங்களது ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை வழங்கி, ஆட்சி  அமைக்க உரிமை கோரின. அதன்படி,  இன்று மாலை முதல்வராக சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.

இதற்கிடையில் அமைச்சரவை தொடர்பாக 3 கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணைமுதல்வர் பதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை தொடர்பாக  சிவசேனா, தேசியவாத காங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சுமார் 6 மணி நேரம் தொடர் பேச்சுவாத்தை நடத்தினார். இதில்  அமைச்சரவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரபுல் பட்டேல், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இதன் காரணமாக, அஜித்பவாருக்கு மீண்டும் துணைமுதல்வர் பதவி வழங்க தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதுபோல அஜித்பவாரின் ஆதரவாளர்கள் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கி, அவர்களை சமாதானப்படுத்தவும் தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவின் குள்ளநரித்தனம் காரணமாக, அஜித்பவார் உள்பட அவரது ஆதரவாளர்கள் எந்த நேரமும் ஆட்சிக்கு தொல்லை கொடுக்கலாம் என்பதால், அவர்களுக்கு பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும், அதே வேளையில் துணைமுதல்வர் பதவிக்கு ஜெயந்த் பட்டேல் காய் நகர்த்தி வருவதாகவும் மும்பையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இன்று மாலை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில்  உத்தவ் தாக்கரே உடன், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா 2 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.  சட்டமன்றத்தில் டிசம்பர் 3ந்தேதி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.