Random image

நாட்டுக்காக உயிர் விட்ட வீரர்களின் குடும்பங்களின் பரிதாப நிலை!! கண்டுகொள்ளாத அரசாங்கம்

மும்பை:

ஒரு ராணுவ வீரர் சண்டையில் இறந்துவிட்டால் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அமைச்சர்கள், தலைவர்கள், அந்த பகுதி மக்கள் என அனைவரும் வீரரின் வீட்டிற்கு திரண்டு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

இது தவிர ‘பாரத் மாதா கீ ஜே’, ‘ஜெய் ஹிந்த்’ என்று தேச பக்தர்களின் கோஷம் ஒரு புறம் விண்ணை பிளக்கும். அந்த வீடு முழுவதும் சில நாட்களுக்கு முக்கிய பிரமுர்களின் வருகையால் நிரம்பி வழியும். ஆனால் அடுத்த ஒரு மாத காலத்தில் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்படும் சூழ்நிலைக்கு அந்த ராணு வீரரின் குடும்பம் தள்ளப்பட்டு விடுகிறது. அதோடு, தங்களது உரிமைகளை பெறுவதற்கே அந்த குடும்பம் அள்ளல்பட வேண்டியதாகி விடுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன் பல உதாரணங்கள் உள்ளது

முதல் உதாரணம்…

கோல்ஹாபூர் சந்த்காத்தை சேர்ந்த சர்மிளா துபரே என்பவர் கூறுகையில், ‘‘ எனது கணவர் ராஜேந்திரா துபரே கடந்த நவம்பரில் எல்லையில் நடந்த சண்டையில் குண்டடிப்பட்டு இறந்தார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போது பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து எங்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். எங்களது குடும்பத்திற்கு திடீரென ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டது. ஆனால், தற்போது ஒருவர் கூட எங்களது கவலையை கேட்க முன்வருவதில்லை.

இழப்பீடாக ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. இதற்காக எங்களை நாக்பூருக்கு வரவழைத்தனர். முதலில் ரூ. 8 லட்சத்தை மட்டுமே கொடுத்தனர். இது பண பிரச்னை கிடையாது. எனது அன்புகுறியவரை இழந்துள்ளேன். ஆனால், மீதமுள்ள தொகை குறித்து யாரும் பேசவில்லை. நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் போது ஏன் அரசு அவ்வாறு வாக்குறுதி கொடுக்க வேண்டும்’’ என்றார்.

2வது உதாரணம்…

அஸ்வினி சத்ரே. இவர் மும்பை கால்வா பகுதியை சேர்ந்தவர். இவரும் ராணுவத்தில் பணிபுரிந்த கணவரை இழந்தவர். இவர் கூறுகையில்,‘‘ பென்சன் வராமல் எனது குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறேன். எனது கணவர் தத்தாரே சத்ரே 2015ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் நடந்த சண்டையில் இறந்தார். கடந்த 2 ஆண்டுகளாக பென்சன் மற்றும் வாரிசு வேலைக்காக அரசின் உயர்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அலைந்துவிட்டேன். வேலை நடக்கவில்லை.

25 சதவீதம் பென்சன் தான் வருகிறது. சம்மந்தப்பட்ட ராணுவ துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் கோப்புகள் டெல்லி சென்றுள்ளது என்று கூறுகின்றனர். 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதே நிலை தான் உள்ளது. ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட பணத்தை வைத்து தான் நான் செலவு செய்கிறேன். இந்த நிலையில் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை’’ என்றார்.

இவர் முதல்வர் தேவேந்திர பட்னாவி¬ஸ் சந்தித்து உதவி கோரினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ எனக்கு அரசு வேலை கிடைத்தால் அதை வைத்து எனது குடும்பத்தை நடத்திக் கொள்வேன் என்று முதல்வரிடம் கூறினேன். உடனடியாக அவர் கோப்பில் கையெழுத்திட்டு சில அதிகாரிகளை அழைத்து என க்கு உதவ உத்தரவிட்டார். இது நடந்தும் ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை’’ என்றார்

3வது உதாரணம்…

கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் காஷ்மீர் சாயசென் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சுனில் சூர்யவான்ஷி என்பவர் இறந்தார். இதனால் தனது மருமகளுக்கு அரசு வேலை கொடுக்கும் படி சுனிலின் த £ய் வித்தால் சூர்யவன்ஷி பல முறை அரசுக்கு கடிதம் எழுதிவிட்டார்.

அவர் கூறுகையில், ‘‘நான் முதல்வருக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கூட வரவில்லை. சுனில் எனது மூத்த மகன். நாங்கள் அவரது வருமானத்தை நம்பி தாழ் வாழ்ந்தோம். எனது மற்றொரு மகன் வங்கியில் வேலை பார்க்கிறார். இதை வைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறோம். எனது மருமகள் ரேகாவுக்கு வேலை கிடைத்தால் குடும்பத்தை சமாளிக்க மேலும் உதவியாக இருக்கும். வாக்குறுதிகளை அளித்த தலைவர்களும், அரசாங்கமும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

4வது உதாரணம்…

உரியில் நடந்த தாக்குதலில் சந்திரகாந் காலண்டே என்பவர் இறந்தார். இவரது மனைவி நிஷா காலண்டே. இவருக்கு 2 மகன்கள். வயதான பெற்றோர். 2 தம்பிகளும் ராணுவத்தில் உள்ளனர். சந்திரகாந் சகோதரர் மஞ்சப்ப காலண்டே கூறுகையில், ‘‘ நாங்கள் இருவர் பணியில் இருப்பதால் நிதி நெருக்கடி இல்லை. ஆன £ல், பல தனியார் அமைப்புகளிடம் இருந்து நன்கொடை மற்றும் விருது என்ற பெயரில் சந்திரகாந் மறைவு க்கு வழங்கப்பட்ட காசோலைகள் எல்லாம் பணம் இல்லை என்று வங்கியில் இருந்து திரும்பி வந்துவிட்டது.

அந்த அமைப்புகளை தொடர்பு கொண்டு கேட்டால் மீண்டும் வங்கியில் டெபாசிட் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். வீடு அல்லது நிலம் வழங்கும் திட்டம் தொடர்பாக அறிக்கை தயார் செய்து கொடுங்கள் என்று அரசாங்கம் கேட்டது. கலெக்டரிடம் வழங்கி இது வரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்று கூறினார்.

கடந்த ஆண்டில் மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 22 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். இதில் பெரும்பாலான குடும்பத்தினரின் நிலை இப்படி தான் உள்ளது.

இந்த புகார் குறித்து ராணுவ வீரர்கள் நல துறை இயக்குனர் சுகாஸ் ஜத்கர் கூறுகையில்,‘‘ சாதாரணமாக அவர்களுக்கு தேவையானவற்றை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பென்சன் வழங்கப்பட்டதை உறுதிபடுத்தியுள்ளோம். குழ ந்தைகள் கல்வியிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மறைந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் போதுமான கல்வியறிவு இல்லாத நிலையில் உள்ளனர். பணிக்கு ஏற்ற கல்வி தகுதி அவர்களிடம் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். பணிக்கு ஏற்ப அவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியான தலைவர்கள், அரசாங்கம் அறிவித்த உதவிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது’’ என்றார்.

இந்த குடும்பங்களின் கவலை போக்க அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கொக்கரிப்பவர்கள் முதலில் இந்த குடும்பங்களின் கவலையை போக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவுள்ளது.