வாக்குப்பதிவு இயந்திர மோசடியை நிரூபித்த மும்பை தேர்தல்

மும்பை:

கடந்த மாதம் 23ம் தேதி மாலை மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவகையில் நாசிக் நகரின் மைய பகுதியான பஞ்சவத்தியில் திடீர் வன்முறை வெடித்தது. வாக்குகள் பதிவான இயந்திரம் உடை க்கப்பட்டதை தொடர்ந்து இந்த வன்முறை நடந்தது. பாஜ நகர தலைவரின் மகன் அந்த வார்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை, பதிவான மொத்த வாக்குகளை விட அதிகமாக இருக்கிறது என்று சிவசேனா குற்றம்சாட்டியது.

இதனால் வீதிகளில் பாஜ மற்றும் சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. ரவுடித்தனம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நிலமையை கட்டுக் கொண்டு வர போலீசார் தடியடியும், வானத்தை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். 9 போலீஸ்காரர்கள் உள்பட உள்ளூர்வாசிகள் பலர் காயமடைந்தனர். இதேபோல் புனே ஏரவாடா பகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பல அரசியல் கட்சிகளை சேர்ந்த 15 வேட்பாளர்கள் புகார் செய்தனர்.

இங்கு பதிவான வாக்குகள் 33, 289. ஆனால் 43,324 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. அதனால் வாக்குச்சீட்டு பயன்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். நல்ல வேலையாக இங்கு வன்முறை எதுவும் நடக்கவில்லை. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் இணைந்து கண்டன கூட்டங்களை நடத்தின.

மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநில தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது. இதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தோல்வி அடைந்த அனைத்து கட்சி வேட்பாளர்களும் இந்த விநோத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இது குறித்து ஒவ்வொரு வேட்பாளர்களும் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அதில் புனே தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மனிஷா மொஹிதி கூறுகையில், ‘‘நான் வெற்றி பெற்றதாக கூறி அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டது. அங்கிருந்து எங்களை வெளியேறும்படி அறிவுறுத்தினர். வெற்றி ஊர்வலத்தை நடத்தி கொண்டிருந்த சமயத்தில், அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மேலும், ஒரு இயந்திரம் எண்ணப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர். அதன் பிறகு பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டனர்’’ என்றார்.

பாஜ எம்.பி சஞ்சய் கக்தே கட்சியில் கிரிமினல்களை அதிக அளவில் இணைத்துள்ளார். அவர் புனே வெற்றியை துல்லியமாக கணித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது கணிப்பு தவறானால் கட்சியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதற்காக இவ்வவறு செயல்படுகிறார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகளவில் இருந்தது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மும்பை சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீகாந்த் ஸ்ரீசத் சகிநாகாவில் அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட அவருக்கு பதிவாகவில்லை. இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ எனக்கு நான் ஓட்டுப்போட்டேன். எனது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் ஓட்டுப்போட்டனர். எப்படி எனக்கு ஒரு ஓட்டுக் கூட பதிவாகமல் போனது’’ என்றார்.

இது போன்ற புகார்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தது. இந்த விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. லோக்சகி பச்சாவ் அண்டோலன் என்ற அமைப்பு நாசிக்கில் அமைக்கப்பட்டுளது. இவர்கள் வாக்குப்பதிவு எந்திர முறைகேடு குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவில்லை என்றால் நாக்பூர் மேயரை பதவி ஏற்க அனுமதிக்கமாட்டோம் என்று தேசிய வாத காங்கிரஸ் எச்சரித்துள்ளது. அம்ராவதியில் அனைத்து கட்சியினரும் சேர்ந்து பந்த் நடத்தினர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. நாசிக், புனே, அம்ராவதியை தொடர்ந்து கோல்காப்பூரிலும் போராட்டம் நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதியும், சமூக ஆர்வலருமான கோல்ஸ் படீல் என்பவர்கள் மாநில அளவில் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட் டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ மோடியும், அமித்ஷாவும் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்திருப்பதாக ச ந்தேகம் உள்ளது. அதற்கு ஏற்ப தற்போது பல முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். காகித சோதனை இயந்திரங்களை கொண்டு வர முடியவில்லை என்றால் வாக்கச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்’’ என்றார்.

வாக்காளர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தவுடன், அதற்கான அத்தாட்சி பிரின்ட் அவுட்டாக வெளிவரும் வகையிலான இய ந்திரம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த முறை மூலம் தனது வாக்கு பதிவானதா? என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த வகை இயந்திரம் 2019ல் அறிமுகம் செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இது மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக பாஜ எம்பி கிரித் சோமையா போராட்டம் நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘வாக்குப்பதிவு இயந்திரத்தை மோசடி செய்து, முடக்க முடியும். அதில் முறைகேடு செய்வது எளிது’’ என்று கூறியருந்தார். ஆனால், 2014ம் ஆண்டில் பாஜ ஆட்சிக்கு வந்தவுடன் அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இயந்திர முறையில் எவ்வித தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘தற்போதுள்ள பழைய வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றிவிட்டு புதிய இயந்திரங்கள் அமைக்கும் பணி ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய பாஜ அரசு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அனைத்து இயந்திரங்களையும் மாற்ற 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். இந்த மேம்பாட்டு பணி ஒரு தொடர் பணியாகும். இதற்கு கால அவகாசம் தேவைப்படும். உத்தவ் தாக்கரேவும், சரத்பவாரும் காழ்ப்புணர்ச்சியோடு குற்றம்சாட்டுகின்றனர். இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கிறது என்று நினைத்தால் வெற்றி பெற்ற அவர்களது வேட்பாளர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

2014ம் ஆண்டிற்கு முன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று பாஜ குற்றம்சாட்டியது. ஆனால் அதன் பிறகு இந்த நடைமுறை மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 2010ம்ஆண்டில் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்தினார். ஐதராபாத் நிறுவனத்தை சேர்ந்த ஹிரி பிரசாத் என்பவர் எப்படி, எந்தெந்த இடங்களில் இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று அப்போது விளக்கமளித்தார். அதன் பிறகு இயந்திரங்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருடியதாக ஹிரி பிரசாத் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து தற்போது ஓய்வுபெற்றுள்ள போலீஸ் அதிகாரி சஞ்சிவ் கோக்லி கூறுகையில், ‘‘தற்போது பல குற்ற ச்சாட்டுக்கள் பாஜ.வுக்கு எதிராக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதே குற்றச்சாட்டுக்களை பாஜ கூறியது. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்கான நேரம் மாறி மாறி வருகிறது. இது கோபத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

‘‘தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக நடக்கிறது. காகித சோதனை இயந்திரம் கொண்டு வருவதில் பல நடைமுறை பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த இயந்திரத்தை பல கட்டங்களாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இந்த முயற்சியை பரிட்சாத்திர முறையில் தான் மேற்கொண்டு வருகிறது. விநியோகம் மற்றும் நிதியாதரத்தில் பிரச்னைகள் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இது அமல்படுத்தப்படும்.

புனே, நாசிக், அம்ராவதியில் மறுதேர்தல் நடத்த வாய்ப்பில்லை. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. ஏஜென்ட்கள் முன்னிலையில் தான் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதனால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. ச ந்தேகத்தின் அடிப்படையில் தான் புகார் கூறுகின்றனர். ஆதாராத்துடன் வந்து புகார் அளித்தால் கண்டிப்பாக விசாரணை நடத்தப்ப டும்’’ என்று மாநில தேர்தல் கமிஷனர் சஹாரியா தெரிவித்தார்.

நாசிக், புனே, அம்ராவதியில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.இந்த பிரச்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னர் தான் காகிதம் சோதனை இயந்திர திட்டத்தின் நிலை குறித்த தகவல்களை அரசு தெரிவிக்க முன் வரும். அத்தாட்சி வழக்கும் முறை வரவில்லை என்றால் தற்போதுள்ள வாக்குப்பதிவு இயந்திர நடைமுறையை நம்ப முடியாது என்று ஏற்கனவே நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed