மும்பை:

மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் சுற்றித்திரிந்த 3,19,400 எலிகளை 7 நாளில் கொன்றது எப்படி என்று பாஜக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏக்னாத் கத்ஸே கூறுகையில், ‘‘ மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலகமான மந்திராலயாவில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 400 எலிகள் இருந்ததாக ஒரு சர்வே முடிவு தெரிவித்துள்ளது. எலிகளை அழிக்க பொது நிர்வாக துறை ஒரு தனியார் நிறுவனத்துக்கு பணி உத்தரவு கொடுத்துள்ளது.

இவற்றை அழிக்க அந்த நிறுவனம் 6 மாத அவகாசம் கேட்டது. ஆனால் 7 நாட்களில் எலிகளை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு 45,628.57 எலிகளை கொன்றுள்ளது. 0.57 என்பது புதிதாக பிறந்த எலிகளாக இருக்கலாம். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 31.68 எலிகளை அந்நிறுவனம் கொன்றுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘தனியார் நிறுவனத்தின் இந்த செயல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். மந்திராலயாவில் இவ்வளவு அதிக எலிகள் இருக்க வாய்ப்பு உள்ளதா?. இதை 7 நாட்களில் அழித்துவிட முடியுமா?. பிரிகான் மும்பை மாநகராட்சி நிர்வாகம் 2 ஆண்டுகளில் 7 லட்சம் எலிகளை கொன்றுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘அந்நிறுவனத்தின் டெண்டர் நடைமுறை, பணி, உண்மை குறித்து விசாரணை நடத்தப்படும்’’ என்று மாநில அமைச்சர் மாதன் யேரவர் தெரிவித்துள்ளார்.