மும்பை:

மகாராஷ்டிரா மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறை கடந்த சில காலமாக குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் கடன் தள்ளுபடி குறித்த செயல்பாடுகளில் நிலவி வரும் குழப்பம் காரணமாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் சிவசேனா எம்எல்ஏ பிரகாஷ் அபித்கருக்கு ரூ. 25 ஆயிரம் கடன் தள்ளபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடி கேட்டு பிரகாஷ் எவ்வித மனுவும் கொடுக்காத நிலையில் இந்த தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை பிரகாஷ் சட்டமன்ற கூட்டத்தில் கிளப்பி மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ நான் கடன் தள்ளுபடி கேட்டு மனு கொடுக்கவில்லை. தள்ளுபடி பெறுவதற்கான விதிமுறைகளின் படி அதற்கு எனக்கு தகுதி கிடையாது. மாநில அரசின் ஆன்லைன் செயல்பாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதை காட்டுகிறது’’ என்றார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகளை தொடர்ந்து அந்த துறையின் செயலாளரை முதல் மாற்றி உத்தரவிட்டார். எம்எல்ஏ பிரகாஷ் அபித்கருக்கு கோல்காபூர் மாவட்டம் கேர்கோத்தி மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த 14ம் தேதி இவரது கணக்குக்கு கடன் தள்ளுபடி என்ற பெயரில் ரூ. 25 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று போராடி வரும் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் உடனடியாக பதலடி கொடுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஆனந்த் காட்கில் கூறுகையில், ‘‘ஆன்லைன் மூலம் கடன் தள்ளுபடி செய்வது முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்பது?, இந்த குழப்பத்தை விரைவில் தீர்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு பணத்தை வழங்க வேண்டும் ’’ என்றார்.