மும்பை:

2019ல் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி. சிவசேனா தனித்து தான் போட்டியிட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த அரசியல்வாதியுமான சரத்பவார் மும்பை மிரர் இதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதன் விபரம்:

மாற்று அணிக்கு தலைமை தாங்கும் திட்டம் உள்ளதா?

நாடாளுமன்றத்தில் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். ராஜ்யசபாவில் எங்களுக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இது தொடர்பாக நாங்கள் அடிக்கடி கூடி விவாதம் செய்து வருகிறோம். அதனால் இதற்கு பின்னால் எதுவும் கிடையாது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியினர் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், மாநிலத்தில் உள்ள நிலைமை அவர்களுக்கு தான் தெரியும்.

மகாராஷ்டிரா மாநில கள நிலவரம் எப்படி உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றும் திட்டம் உள்ளதா?

புதிதாக பதவி ஏற்றுள்ள காங்கிரஸ் தலைவருடன் 2 முறை பேசியுள்ளேன். இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் இருப்பது தெரியவந்துள்ளது. விதார்பாவில் இரு கட்சிகளும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். தற்போதை ஆளும்கட்சிக்கு நாங்கள் வலுவான மாற்று அணியாக அழுத்தம் கொடுப்போம்.

மோடியுடன் நெருக்கமாக இருந்தாலும், அவரை விமர்சனம் செய்ய தவறுவதில்லை. தற்போது உங்களது உறவு எப்படி உள்ளது?.

மோடி அவரது கட்சியின் திட்டங்களை செயல்படுத்துகிறார். அதற்கு நாங்கள் எதிராக உள்ளோம். நாட்டின் நலனில் பாஜக.வுக்கு அக்கறை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. அதனால் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சி என்பதற்காக அனைத்து திட்டங்களையும் எதிர்க்கவில்லை. மக்கள் விரோத திட்டங்களை தான் எதிர்க்கிறோம்.

சிவசேனாவின் தற்போதைய அறிவிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள். 2019ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடுமா?

சிவசேனா கடைசி வரை இந்த முடிவில் இருந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜக அல்லது சிவசேனாவுடன் கூட்டணிக்கு செல்லும் என்ற கருத்து நிலவுகிறதே?

மீடியாக்களில் ஏற்பட்டுள்ள செய்தி பற்றாகுறையை போக்க இவ்வாறு வெளியிடப்படுகிறது. எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புகிறோம். மாநில தலைமை பொறுப்புகளில் உள்ள சிலர் தான் இந்த கூட்டணிக்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமை மாநில, மத்திய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செல்கிறது. ஒத்த கருத்துடைய கட்சியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் மாநில கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவால் தனித்து ஆட்சிக்கு வர முடியாத காரணம் என்ன?

நவீன காலத்தில் மகாராஷ்டிரா உண்மையிலேயே தனி மாநிலம் கிடையாது. பல பிராந்தியங்கள் இதில் அடங்கியுள்ளது. விதர்பா, மராத்வாடா, இதர மகாராஷ்டிரா பகுதிகள் உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கு என்று தனித்தனி சமூகம், பொருளாதாரம், அரசியல் கொள்கைள் உள்ளது. அதனால் தான் ஒரு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைப்பது கிடையாது. தற்போது கூட ஆளும் பாஜக.வில் அதிக எம்எல்ஏ.க்கள் விதர்ப்பாவை சேர்ந்தவர்கள்.