மராத்தா சமுதாயத்தினருக்கு 16% ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

மும்பை

ல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமுதாயத்தினருக்கு 16% இட ஒதுக்கீடு மசோதா மகாராஷ்டிர சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடியில் மூன்றில் ஒரு பங்கு மராத்தா சமுதாயத்தினர் உள்ளனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த ஒய் பி சவான், சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரி முதல்வர் பதவி வகித்துள்ளனர். அப்படி இருந்தும் அந்த சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் பின் தங்கி உள்ளனர். அதனால் அவர்கள் இட ஒதுக்கீடு கோரி பல முரை போராட்டம் நடத்தி உள்ளனர்.

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மராத்த சமுகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டது ஆனால் அந்த அவசர சட்டத்துக்கு மும்பை நீதிமன்றம்தடை விதித்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி என்னும் சிற்றூரில் மராத்தா சமுதாயத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை மற்ற சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இதனால் மாபெரும் கலவரம் எழுந்தது. அத்துடன் கல்வி வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கிட்டு கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்காததால் கடந்த ஜுலை மாதம் மாநிலம் முழுவதும் பயங்கர வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பல இடங்களில் ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தபட்டன. அதன் பிறகு அரசு சற்றே இறங்கி வந்து மராத்தா சமூகத்தினரின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம்  கேட்டுக் கொண்டது.

அந்த ஆய்வறிக்கையின் படி நேற்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மராத்தா இட ஒதுக்கீடு மசோதாவை சட்டப்பேரவை கீழ்சபை யில் அளித்தார். மராத்தா சமூகத்தினர் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதால் அவர்களுக்கு 16% கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

அந்த மசோதா ஏகமனதாக நிறைவேறியதால் மேல் சபை அங்கீகாரத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஒதுக்கீட்டையும் சேர்த்தால் தற்போது இட ஒதுக்கீடு 68% ஆக உயர உள்ளது. ஏற்கனவே தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கிடு உள்ளதால் அதிக இட ஒதுக்கிடு அளிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தை பிடிக்க உள்ளது.