புதுடெல்லி: உருளைக்கிழங்கு பயிர் நடவு செய்வதற்கான புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது மகிந்திரா நிறுவனம். தன்னுடைய வேளாண் உபரணங்கள் பிரிவின்கீழ் இந்த தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

‘பிளான்ட்டிங்மாஸ்டர் பொட்டேட்டோ +’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம், ஐரோப்பாவின் டீவுல்ஃப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண் சூழலுக்கு ஏற்றவகையில், உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நுட்பமான உருளை நடவு தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு, பஞ்சாப் மாநில விவசாயிகளுடன், மகிந்திரா & டீவுல்ஃப் ஆகிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்தன. ‍அதன்படி, பாரம்பரிய முறைகளோடு ஒப்பிடுகையில், அந்தப் புதிய தொழில்நுட்ப நடைமுறையைப் பின்பற்றியபோது, அறுவடையில் 20%-25% அதிகம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

உலகின் இரண்டாவது பெரிய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் என்ற முறையில், ஒரு நவீன உருளை நடவு இயந்திரம் இந்த நாட்டிற்கு அவசியம் தேவை என்றுள்ளது மகிந்திரா நிறுவனம்.

இந்த இயந்திரம், சில இடங்களில் வாடகை அடிப்படையிலும் கிடைக்கிறது மற்றும் எளிய முறையிலான நிதியாதார உதவிகளின் அடிப்படையிலும், இந்த இயந்திரத்தை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.