புனே

காராஷ்டிர மக்கள் வெள்ளத்தால் தவித்து வரும் நிலையில் அம்மாநில பாஜக  அமைச்சர்கள் படகு சவாரியை வீடியோ எடுத்துக் கொண்டாடி வருகின்றனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். 11 பேர் காணாமல் போய் உள்ளனர். குறிப்பாக ஐந்து   தினங்களாக மேற்கு மகாராஷ்டிராவில் பெய்த கனமழை காரணமாக அந்தப் பகுதியில் வெள்ளம் உடாகி மக்கள் மிகவும் தவித்து வருகின்றனர். கோலாப்பூர் செல்லும் பாதை வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த சாலையில் 17000 வாகனங்கள் சிக்கி உள்ளன.

கோலாப்பூர் மற்றும் சங்லி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலமாக அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் அளிக்கப்படுகிறது. அத்துடன் அந்த பகுதியில் உள்ள 265 நிவாரண முகாம்களில் சுமார் 2,85,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பகுதியில் உள்ள மக்களைக் குறித்து எந்த ஒரு பாஜக  தலைவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மகாராஷ்டிர மாநில நீர்வளத்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான கிரிஷ் மகாஜன் இந்த வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது அவர் படகு சவாரியில் கையசைத்துச் சிரித்து அனுபவித்தபடி சென்றுள்ளார்.  அது வீடியோ பதிவாக்கப்பட்டு தற்போது பலராலும் சமூகத் தளங்களில் பகிரப்பட்டு வைரலாகிறது.

வெள்ளத்தில் மக்கள் தவித்து வருகையில் மகாராஷ்டிர முதல்வர்  தேவேந்திர ஃபட்நாவிஸ் ஏற்கனவே விதர்பா பகுதியில் மகாஜனதேஷ் யாத்திரை என்னும் பயணத்தை நடத்தி வருகிறார். இது குறித்து கடும் விமர்சனம் எழுந்ததால் தனது பயணத்தை இரு தினங்களுக்கு மட்டும் ரத்து செய்துள்ளார். ஆனால் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் கிரிஷ் மகாஜன் பதில் அளிக்கவில்லை.

எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலீக், “வெள்ளப் பெருக்கு என்பது மிகவும் உணர்ச்சிகரமான விளைவாகும். ஆனால்  அரசு இதைக் கவனத்தில் கொள்ளவில்லை மீட்புப் பணிகள் பல இடங்களில் தாமதமாகிறது. மக்களுக்கு நிவாரணப் பணிகளுக்குப் படகு கிடைக்காத நிலையில் அரசியல்வாதிகளுக்கு செல்ஃபி எடுத்துக் கொள்ளப் படகுகள் கிடைக்கின்றன. விளம்பரத்துக்காக அவர்கள் எதையும் செய்வார்கள். இந்த பேரிடர் மேலாண்மையை இவர்கள் பேரிடர் சுற்றுலாவாக மாற்றி உள்ளனர்.