சிலை அமைக்கப் பணம் இருக்கு – மருத்துவமனைக்குத் தர பணம் இல்லையா? : மும்பை உயர்நீதிமன்றம் காட்டம்

மும்பை

பொதுச் சுகாதாரத்துக்குச் செலவு செய்யாத மகாராஷ்டிர அரசை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் உள்ள நிவ்ரோஜி வாடியா மற்றும் பாய் ஜெராபாய் குழந்தைகள் மருத்துவமனைகள் பிரபலமான மருத்துவமனைகள் ஆகும்.  மாநில அரசு இந்த இரு மருத்துவமனைகளுக்கு வருடத்துக்கு 50 மற்றும் 85 % நிதி உதவி அளிக்க வேண்டும்.   ஆனால்  நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்த நிதியை மாநில அரசு ஒதுக்காமல் இருந்துள்ளது.

ஏழை மக்களுக்குப் பெரிதும் உதவி வரும் இந்த இரு மருத்துவமனைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.   அந்த மனு நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் ஆர் ஐ சாக்லா ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில்  அரசு வழக்கறிஞர், “மாநில நிதித்துறை வாடியா மருத்துவமனைக்கு ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.   அத்துடன் பாய் ஜெராபாய் குழந்தைகள் மருத்துவமனைக்கு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நிதிப் பற்றாக்குறை காரணமாக  இந்த தொகை இன்னும் 3 வாரங்களில் வழங்கப்படும். ” எனத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், “மகாராஷ்டிர அரசு படேல் சிலையை விட உயரமாக அம்பேத்கர் சிலையை அமைக்கத்  திட்டமிட்டுள்ளது.   அதற்கான பணம் அரசிடம் உள்ளது.  ஆனால்  ஏழைகளுக்கான மருத்துவமனைக்கு அளிக்க அரசிடம் பணம் இல்லையா?  இப்போது 3 வாரம் என்பது பிறகு மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படும்.  எனவே நிலுவைத் தொகையை வெள்ளிக்கிழமை அதாவது இன்று முழுமையாக வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.