பாரபட்சமான முறையில் விளம்பரம் செய்ததால் எழுந்த சர்ச்சை: பிரபல நிறுவனம் மன்னிப்பு

டெல்லி: பாரபட்சமான முறையில் பணிப்பெண்களை பற்றி குறிப்பிட்டு விளம்பரம் வெளியிட்ட கென்ட் நிறுவனம் அதற்கு மன்னிப்பு கோரி இருக்கிறது.

பிரபல தண்ணீர் சுத்திகரிப்பான்களை விற்பனை செய்யும் கென்ட் நிறுவனம் அண்மையில் ஒரு விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இரண்டு படங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. முதல் படத்தில் வீட்டு பணிப்பெண்ணின் கைகள் சப்பாத்தி மாவை பிசைவதை போன்ற படம்.

அப்படத்திற்கு மேலே உள்ள தலைப்பு, “உங்கள் வேலைக்காரி அட்டா மாவை கையால் பிசைய அனுமதிக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டு இருக்கும். இரண்டாவது படத்தில், அவள் கைகள் அசுத்தமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் கீழே, மாவை பிசைவதற்கு KENT அட்டா & பிரட் மேக்கரைத் தேர்வுசெய்க. ஆட்டோமேஷன் இந்த நேரத்தில் சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் தான் இப்போது பெரிய சர்ச்சைக்கு கொண்டு போய்விட்டிருக்கிறது.

இணையத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டு பாகுபாடு காட்டும் இந்த நிறுவனத்தின் விளம்பரத்தையும், அதன் தயாரிப்புகளையும் புறம்தள்ளுங்கள் என்று கருத்துகள் பதிவாகின. இன்னும் சிலரோ அந்த விளம்பரத்தின் ஸ்கிரீன் ஷாட்களை #BoycottKent என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்தனர்.

விளம்பரம் விவகாரம் ஆனதை தொடர்ந்து, கென்ட் நிறுவனம் மன்னிப்பு கோரி இருக்கிறது. கென்ட் அட்டா ,  பிரெட் மேக்கரின் விளம்பரத்தை வெளியிட்டதற்கு எங்கள் மன்னித்து கொள்ளவும். இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

ஆகையால் அது திரும்பப் பெறப்பட்டது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் நாங்கள் மதிக்கிறோம் என்று கென்ட் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குப்தா கூறி உள்ளார்.