ஜெர்மனி : இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை முக்கிய குற்றவாளி கைது

பெர்லின்

லங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கின் குற்றவாளியான விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் புகழ்பெற்ற தமிழ் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான லட்சுமண் கதிர்காமர் இலங்கை அரசில் வெளியுரவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி கொழும்புவில் இவர் கொல்லப்பட்டார். இந்த கொலையில் எல்டிடிஇ என அழைக்கப்படும் விடுதலைப் புலிகல் இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகப்படும் பல விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இலங்கையை விட்டு சென்று விட்டனர். அவர்களை உலகெங்கும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜெர்மன் போலீசாரால் நவநீதன் என கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பை சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜெர்மன் காவல்துறை, “நேற்று ஜெர்மன் காவல்துறையினர் ஒரு இலங்கை தமிழரை கைது செய்துள்ள்னர். இவர் இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலையில் முக்கிய குற்றவாளி என சந்தேகப்படுபவர் ஆவார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர். ஜெர்மன் சட்டப்படி அவருடைய முழுப்பெயரையும் வெளியிட இயலாது” என தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவருக்கு லட்சுமண் கதிர்காமர் கொலையிலும், ஈ பி டி பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது நடந்த கொலை முயற்சியிலும் தொடர்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நபர் எத்தனை வருடங்களாக ஜெர்மன்யில் வசித்து வருகிறார் என்னும் விவரத்தை ஜெர்மன் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.