பராமரிப்பு இல்லாமல் முடங்கிய நன்கொடை உபகரணங்கள்!! மாநகராட்சி பள்ளிகளில் அவலம்


சென்னை:

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை, தனியார் நிறுவனங்கள் போன்றவை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, கம்ப்யூட்டர், மின்விசிறி, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை பராமரிக்க போதுமான நிதி ஆதாரம் இல்லாமலும், அவற்றை பராமரிப்பு செய்வது தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் அவை செயலிழந்து கிடக்கின்றன.

‘‘எங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டன. அது 2 ஆண்டுகளுக்கு வேலை செய்தது. அதன் பிறகு அதில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அதை பயன்ப டுத்துவதை நிறுத்திவிட்டோம். இதை சரி செய்ய முயற்சித்தோம். ஆனால் யாரும் வரவில்லை. அதோடு சரி செய்ய அதிக அளவில் செலவாம் என தெரிவிக்கப்பட்டது. அதனால் அந்த முயற்சியை கைவிட் டுவிட்டோம்’’ என்று அரசுப் பள்ளி தலைமையாசிரியை ஒருவர் கூறினார்.

‘‘இவற்றை பொருத்தும் தனியார் நிறுவனங்கள் பராமரிப்பது குறித்த முழு தகவல்களை அளிப்பது கிடையாது. பழுது ஏற்பட்டால் யாரை தொடர்பு கொள்வது என்பது குறித்த விபரங்களை அளிக்காமல் சென்றுவிடுகின்றனர்’’ என்று மற்றொரு பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார்.

இந்த பள்ளிக்கு ஒரு தனியார் நிறுவனம் ஆர்ஓ பிளான்டை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமைத்து கொடுத்துள்ளனர். இதன் கியாரண்டி காலம் இன்னும் 2 மாதத்தில் முடிகிறது. இதன் பிறகு என்ன செய்வது என்று பள்ளி நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.

“இது வரை ஆர்ஓ பிளான்டில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை. இன்னும் இரண்டு மாதத்திற்கு பிறகு பழுது ஏற்பட்டால் யாரை தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை’’ என்றார்.

பராமரிப்பு பிரச்னை மட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகளும் இவற்றை சேதப்படுத்திவிடும் சூழலும் நிலவுகிறது. நகரின் முக்கிய பகுதியில் உள்ள ஒரு அரசுப் பெண்கள் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியை ஒருவர் கூறுகையில், ‘‘சுத்திகரிப்பு கருவி பொருத்திய 2வது நாளிலேயே மாணவிகள் அதை உடைத்துவிட்டனர். அதனால் அடுத்த கருவி வாங்குவது குறித்து பரிசீலனை செய்யவில்லை’’ என்றார்.

சுத்திகரிப்பு கருவி மட்டுமின்றி கம்ப்யூட்டர்களும் நிலையும் இப்படி தான் இருக்கிறது. ஒரு மாநகராட்சி பள்ளிக்கு தனியார் நிறுவனம் 5 கம்ப்யூட்டர்களை வழங்கியது. ஆனால் இதில் ஹார்டுவேர் பிரச்னை இரு க்கிறது என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை சரி செய்ய முடியவில்லை.

தென்சென்னையில் உள்ள பள்ளிக்கு கம்ப்யூட்டர்கள் வழங்க தனியார் நிறுவனம் ஒன்று முன் வந்தது. ஆனால், ஏசி அறை இல்லை மற்றும் கம்ப்யூட்டர்கள் இயங்க போதுமான ஸ்விட் மற்றும் பிளக் பாயின்ட்கள் இல்லை என்ற காரணத்தால் அவற்றை பெற முடியாமல் போனது. மற்றொரு பள்ளியில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டும் அதை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.

English Summary
Maintenance issues keep Chennai corporation schools from using donated utilities