டிடிவி ஆதரவு எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய துணைஜனாதிபதியிடம் மைத்ரேயன் மனு!


டில்லி:

தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், கே.பி.முனாசமி  மனு அளித்துள்ளனர்.

இன்று இரட்டை இலை குறித்த தேர்தல் கமிஷனின் விசாரணைக்காக டில்லியில் முகாமிட்டுள்ள இவர்கள், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து, தகுதி நீக்கம் கோரி மனு கொடுத்தனர்.

ஏற்கனவே மாநிலங்களவை செயலாளர் தீபக் வர்மாவிடம், மைத்ரேயன் எம்.பி., கடந்த 31ந்தேதி மனு  கொடுத்துள்ள நிலையில், தற்போது துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடமும் மனு கொடுத்துள்ளார்.

இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டதாக டிடிவி ஆதரவு 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள மூன்று எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்துள்ளனர்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி ஆகியோர் இன்று வெங்கையா நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர்.

தினகரன் ஆதரவு எம்பியான நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுலகிருஷ்ணனை தகுதி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் 3 பேரும் அதிமுகவில் இருந்து தினகரன் அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.