டில்லி ரோகிங்கிய அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து: நாச வேலை காரணமா?

டில்லி:

டில்லியில் உள்ள  ரோகிங்கிய அகதிகள் முகாமில் அதிகாலை ஏற்பட்ட  பயங்கர தீ விபத்தில்  முகாம் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில், அகதிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகளையும் பறிகொடுத்தனர். இந்த தீ விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கும் என்று அகதிகளும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் கூறி உள்ளனர்.

தலைநகர் டில்லியில் தென்கிழக்கு  பகுதியில், மியான்மரில் இருந்து அகதிகளாக வந்துள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கான  அகதிகள் முகாம் உள்ளது.  இங்கு  228 பேர்  தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த முகாமில் இன்று  அதிகாலை திடீரென தீ பிடித்து மளமளவென் பரவித் தொடங்கியது. இதன் காரணமாக அங்கு தங்கிருந்த அகதிகள் தங்கள் குழந்தைகளையும், உடமை களையும் எடுத்துக்கொண்டு வெளியேறினர்.

இதுகுறித்து  தகவலறிந்து அங்கு வந்த  10-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள்  மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தன.  இந்த தீ விபத்தில் 44-க்கு மேற்பட்ட டெண்ட்கள் எரிந்து சேதமாகியது. மேலும் அகதிகளுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டைகளும் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில்,   மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தற்போது ரோகிங்கிய அகதிகள் மற்றொரு முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால், இந்த தீ விபத்துக்கு நாச வேலைதான் காரணம்  என அங்கு தங்கியிருந்த அகதிகள் கூறி உள்ளனர். அதுபோல, முகாம் அருகில் உள்ள  பகுதியை சேர்ந்த பொதுமக்களும், இந்த தீ விபத்து திட்டமிட்ட சதி என்றும், இதற்கு நாசவேலைதான் காரணம் என்றும் தெரிவித்து வருகின்றனர்..

சமீபத்தில் காஷ்மீர் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்த விவகாரத்திலும், ஒரு சில அமைப்புகள் ரோகிங்கியா அகதிகள்மீது பலி போட முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.