தகுதி இழந்தார் ராஜபக்சே: இலங்கை சபாநாயகர் அறிவிப்பு

கொழும்பு:

லங்கை நாடாளுமன்றத்தில் இன்று ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்ததால், அவர் பிரதமர் பதவிக்கான தகுதியை இழந்து விட்டதாக  சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் இடையே ஏற்பட்டு வந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் அதிபர் சிறிசேனா.

இதற்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நாடாளுமன்றத்தையும் சிறிசேனா முடக்கினார். ஆனால், இலங்கை பிரதமர் நானே என்று ரணில் போர்க்கொடி தூக்கினார்.

இலங்கை பிரதமர் யார் என தீர்மானிக்கும் சக்தி அங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் கைகளில் இருந்தது. அவர்கள் 15 பேரும் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டதால், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை சந்திக்கும் நிலை இருந்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்தும், 2019ம் ஆண்டு ஜனவரி 5ந்தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறும்  என்றும் அதிபர் சிறிசேனா அதிரடியாக அறிவித்தார். இது இலங்கையில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அரிசியல் சாசனப்படி அதிபரின் அறிவிப்பு செல்லாது என ரணில் தரப்பில் இலங்கை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அதிபரின் நாடாளுமன்றம் கலைப்பு அறிவிப்பை ரத்து, உடனே நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டது.

அதன்படி இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் ரணில் கட்சி சார்பில் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா  தீர்மானம் தாக்கல் செய்யப் பட்டது. இதனை எதிர்த்து ராஜபக்சே அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து, தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது,  அதையடுத்து, ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக  சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், இதன் காரணமாக அவர் பிரதமர் பதவிக்கு தகுதி இழந்ததாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்துள்ளார்.  கூச்சல், குழப்பம் நிலவியதையடுத்து அவையை நாளை வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

இதன் காரணமாக இலங்கை பிரதமராக  ரணில் விக்ரமசிங்கே பிரதமராக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.