மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

பம்பை:

பரிமலை அய்யப்பன் கோவில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு  நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 20ந்தேதி வரை நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16ந்தேதி மாலை திறக்கப்பட்டு டிசம்பர் 27ந்தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்க ளும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து கோவிலுக்கு வர பல பெண்கள் முயற்சிகள் மேற்கொள்வதும், அதை பாஜக, இந்துத்துவா அமைப்புகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தடுத்து வருவதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

பின்னர் நாளை  அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் நடைபெற்று வழக்கமான பூஜைகள் நடைபெற்று வரும்.

அதைத்தொடர்ந்து பொங்கல் நாளான ஜனவரி 14ந்தேதி  மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. முன்னதாக ஜனவரி  11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும்.

அதையடுத்து ஜனவரி 12ந்தேதி மகர விளக்கு அன்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

பின்னர் மகர விளக்கு தரிசனம் முடிந்ததும், ஜனவரி 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து  கோவில் நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு பூஜைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. மேலும், பெண்கள் வராதவாறு இந்து அமைப்புகளும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.