சென்னை:

மிழ் மொழியைக் காக்க, மொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னையில் கூடிய தமிழறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (26.03.2017) சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு   தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் மொழியைக் காப்பதற்காகன பல்வேறு ஆலோசனைகளை பலரும் வழங்கினார்கள். அவர்களது கருத்துக்களின் அடிப்படையில்  ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 : தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்று தமிழ் மொழி எதிர்கொண்டு வரும் அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம் தமிழ்வழிக் கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலவழிக் கல்விமுறை ஊக்குவிக்கப்பட்டது தான். 1976&ஆம் ஆண்டுக்கு முன் தமிழகத்தில் 23 பதின்நிலை பள்ளிகள் மட்டும் தான் இருந்தன. ஆனால், தமிழகத்தில் இன்று ஆங்கில வழி தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. தமிழ் சீரழிவதற்கு தமிழகத்தில் காளான்களைப் போல முளைத்துள்ள ஆங்கில வழி பள்ளிகளும் காரணமாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1999&ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி 102 தமிழறிஞர்கள்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். அப்போது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று ஆட்சியாளர்கள் உறுதியளித்தனர். அதன்பின் திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழை மீட்கும் முயற்சிகளின் ஒரு கட்டமாக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 09.03.2008 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், சான்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திலும் இதே கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு 25.05.2008 அன்று அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் வழங்கப்பட்டது. அப்போதும் இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வரை தமிழ் பயிற்றுமொழி ஆகவில்லை.

தமிழின் சீரழிவைத் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை பயிற்றுமொழியாக அறிவிப்பது தான் முதன்மையான தீர்வு என்பதால், அதற்கான சட்டத்தை சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 : தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை பட்ட மேற்படிப்பு வரை நீட்டிக்க வேண்டும்

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலம் நிலவுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006-ஆம் ஆண்டில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவருக்கும் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் விலக்குப் பெற்று தமிழை படிக்காத நிலை தொடருகிறது.

முறையான சட்ட நடவடிக்கைகளின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தமிழ் பாடத் தேர்வை எழுதுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்தை  பட்ட மேற்படிப்பு வரை நீட்டிக்கவும், இந்தச் சட்டத்தை ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்படி இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 : தமிழைக் காக்க மொழிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்

உலகில் பிறமொழி கலப்பின்றி பேசும் திறனும், தகுதியும் தமிழுக்கு மட்டும் தான் உண்டு. காரணம் எந்த ஒரு செய்தியையும் விளக்குவதற்கான சொற்கள் தமிழில் மட்டுமே உள்ளன. இதற்காக வேறு எந்த மொழியிடமும் சொற்களை கடன் வாங்குவதற்கான தேவை தமிழுக்கு இல்லை. ஆனாலும், இந்தியாவில் அதிக அளவில் ஆங்கிலம் கலந்து பேசப்படும் மொழியாக தமிழ் விளங்குகிறது. அதேபோல், பொதுவெளிகள், ஊடகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தமிழைத் தவிர்த்து பிறமொழிகளை பேசும் நிலையும் தமிழகத்தில் உள்ளது. இது தமிழுக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம் ஆகும்.

தவிர்க்க முடியாத சூழல்கள் தவிர்த்து, தமிழகத்தில் வாழும் அனைவரும் பிறமொழிகளில் பேசுவது, பிறமொழிகளில் பெயர்பலகைகள் வைப்பது போன்றவற்றை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் வகை செய்யும் வகையில் தமிழ் மொழிச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இது நடைமுறை சாத்தியமா? என்ற வினா எழக்கூடும். போதிய முன்னேற்பாடுகளும், காலக்கெடுவும் வழங்கப்படும் பட்சத்தில் இது சாத்தியமானது தான். ஸ்லோவாகியா நாட்டில் ஸ்லோவாக் மொழி பேசுவது தான் அந்நாட்டின் இறையாண்மையை போற்றும் செயல் என்று கூறி, ஸ்லோவாக் மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது.  சீனாவில் ஊடகங்களில்  மொழிக் கலப்பை தடுக்க சீன மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தமிழைப் பாதுகாப்பதற்கான தேவைகளை கருத்தில் கொண்டு, பிறமொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உரிமைகளையும் பறிக்காத வகையில் மொழிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். தமிழறிஞர்களுடன் கலந்தாய்வு நடத்தி இச்சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ் தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படியும் என்று இக்கலந்தாய்வுக் கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் 4 : செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும்

செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது. இதன் பொறுப்பு இயக்குனராக முனைவர் இராமசாமி இருந்தவரை தமிழாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதிக எண்ணிக்கையில் நூல்கள் வெளியிடப்பட்டன. அதன்பின்னர் இந்த அமைப்பு முடங்கிக் கிடக்கிறது.

தமிழக அரசின் முதலமைச்சர் தான் அலுவல் வழியாக இந்த அமைப்பின் தலைவர் ஆவார். ஆனால்,  கடந்த 6 ஆண்டுகளில் பதவி வகித்த 3 முதலமைச்சர்களும் இந்நிறுவனத்தை திரும்பிக்கூட பார்க்க வில்லை. அதுமட்டுமின்றி, இது நடுவண் நிறுவனம் என்பதால் பதிவாளர், இயக்குனர் பதவிகளுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் உள்ளவர்களையே அமர்த்த வேண்டும் என்ற பொருந்தாத விதியை வைத்துக் கொண்டு, தமிழ் தெரியாதவர்கள் அமர்த்தப்படுகின்றனர். இதனால் தமிழாராய்ச்சி முடங்குகிறது.

இந்நிலையை மாற்றும் நோக்குடன் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் தலைவர், இயக்குனர், பதிவாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தமிழறிஞர்களை மட்டுமே அமர்த்தும் வகையில் விதிகள் திருத்தப்பட வேண்டும். மேலும் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

தீர்மானம் 5 : தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்

இந்தியா பலமொழி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்புகளின் ஒன்றியமாகும். அவ்வாறு இருக்கும் போது, மக்கள் பேசும் அனைத்து மொழிகளும் அந்த நிலப்பரப்புக்களை ஆளும் அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்படுவதே இயற்கை நீதியாகும். இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக அறிவிக்கப்படும் தகுதியுடன் 8-ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இம்மொழிகளுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டியது வேண்டியது நடுவண் ஆட்சியாளர்களின் கடமை ஆகும். ஆனால், இதுதொடர்பாக தொடர்ந்து விடுக்கப்படும் கோரிக்கைகளை நடுவணரசு ஏற்க மறுக்கிறது.

இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தையும், அந்த மொழிகளை பேசும் மக்களுக்கு மதிப்பையும் வழங்கும் நோக்கத்துடன், தமிழையும், எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற 21 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்க இக்கூட்டம் வேண்டுகிறது.

தீர்மானம் 6 : சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்

அனைவருக்கும் நீதி கிடைப்பதற்கான முதல் தேவை நீதி வழங்கும் மன்றங்களில் உள்ளூர் மொழி ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும். ஆனால், உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாக இருப்பதால் பாமர மக்களுக்கு நீதி கிடைப்பதில் தடைகள் உள்ளன. இதற்கு முடிவு கட்டும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் சட்டம் 06.12.2006 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன்பின் பத்தாண்டுகள் ஆகியும் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) பிரிவின் கீழ் உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப்பிரதேசம்,  இராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பது அநீதியாகும். எனவே, இந்த அநீதியை களையும் வகையில் தமிழை  சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக குடியரசுத் தலைவர் மூலம் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று இக்கலந்தாய்வுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7 : தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் படிப்பதற்கான வசதிகள் உள்ளன. ஆனாலும், அதை விடுத்து ஆங்கிலவழியில் படிப்பது கனியிருப்ப காய் கவரும் செயலாகவே அமையும். தமிழுக்கு எதிரான இந்த தவறை எந்த வகையிலும், குறிப்பாக தமிழக அரசு ஊக்குவிக்கக் கூடாது.

ஆனால், தமிழகத்தில் ஆங்கில வழியில் படித்தால் தான் வேலை. தமிழில் படிப்பவர்களுக்கு வேலை  இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் படித்த மாணவர்களில் பெரும்பான்மையினருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதே இதற்கு சாட்சி.

இந்த நிலையை மாற்றும் வகையிலும், தமிழ் மொழியில் படித்தவர்களை ஊக்குவிக்கும் வகையிலும்  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை, அரசு கல்லூரிகளில் இடம் என்று அறிவிக்க வேண்டும். இதற்கான சட்டத்தையும் நிறைவேற்ற தமிழக அரசை இக்கூட்டம் கோருகிறது.

தீர்மானம் 8 : மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு  தமிழ்ப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காத மாணவ, மாணவியர் ஒருபுறம் என்றால், தமிழை ஒரு பாடமாக படிப்பவர்கள் கூட அதை கடமைக்காக படிக்கும் அவல நிலை காணப்படுகிறது.  மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கும் அறிவியல், கணிதம் மற்றும் விருப்பப்பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால்  தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது என்ற மனநிலை மாணவர்களிடம் ஏற்பட்டு உள்ளது. இது தமிழ் வளர்ச்சிக்கு வகை செய்யாது; வீழ்ச்சிக்கே வழி வகுக்கும் என்பது தான் உண்மை.

இந்நிலையை மாற்றும் வகையில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழில்படிப்புகள் மற்றும் பிற பட்டப்படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை கணக்கிடும்போது தமிழில் பெற்ற மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9 : தமிழ் பாதுகாப்பு கோரிக்கைகளுக்காக போராட போராட்டக் குழு 

தமிழ்நாட்டில் தமிழ் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பதையும், தமிழைக் காப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தினர். தமிழைக் காக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே மத்திய, மாநில அரசுகளுக்கு மேற்கண்ட 8 கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், கடந்த காலங்களில் பலமுறை வலியுறுத்தியும் இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் எழுச்சியான தொடர் போராட்டங்களின் வழியாகத் தான் இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். இந்தப் போராட்டங்களை அரசியல் சார்பின்றி அனைவரையும்  ஒருங்கிணைத்து பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தினர். அதன்படி தமிழகத்தில் தமிழ் பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்த போராட்டக்குழு அமைப்பதென்று இக்கூட்டம்  தீர்மானிக்கிறது. குழுவின் நிர்வாகிகள்& உறுப்பினர்கள் விவரம் கலந்தாய்வுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.