“தேஜஸ்வியை முதல்வராக்கினால் நிதீஷ்குமாரை பிரதமராக முன் மொழிகிறோம்” லாலு கட்சி பேரம்

 

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதீஷ்குமார் முதல்-அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேரை பா.ஜ.க. தனது கட்சியில் சேர்த்துள்ளது.

பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் மத்தியில், இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பா.ஜ.க.வின் செயல், கூட்டணி தர்மத்துக்கு எதிரானது” என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பீகாரின் பிரதான எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே. டி. கட்சி, அந்த மாநிலத்தில் புதிய அரசியல் பேரத்தை தொடங்கி உள்ளது.

ஆர்.ஜே.டி. கட்சியின் மூத்த தலைவரான உதய் நாராயண் சவுத்ரி அளித்துள்ள பேட்டி ஒன்றில் “நிதீஷ்குமாரை, எங்கள் கட்சி ஒருமுறை முதல்-அமைச்சராக்கியது. அதற்கு பிரதி உபகாரமாக, தேஜஸ்வி யாதவை (லாலு மகன்) நிதீஷ்குமார் முதல்-அமைச்சராக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

“தேஜஸ்வியை முதல்வராக்கினால், நாங்கள் நிதீஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்த தயாராக உள்ளோம்” என அவர் கூறினார்.

“பா.ஜ.க. சின்ன மீன்களை சாப்பிடும் பெரிய மீனாகும். இதனால் தான் சிவசேனாவும், பின்னர் அகாலி தளம் கட்சியும், பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகியது” என சவுத்ரி மேலும் தெரிவித்தார்.

– பா. பாரதி