‘கமல் மீது விழுந்து பிரண்டாதீர்கள்’.. மக்கள்நீதிமய்யம் காட்டமான அறிக்கை

சென்னை:

கொரோனோவை ஒழிக்க அக்கறையுடன் செயல்படுங்கள்,  கமல்மீது விழுந்து பிரண்டாதீர்கள் என்று தமிழகமுதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணித் தலைவர் பொன்னுசாமி  கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் சரியில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசனுக்கும் ஏதும் தெரியாது என்று கூறியிருந்தார்.

அதற்கு பதில் தரும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணித் தலைவர் பொன்னுசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

‘சேலத்தில் செய்தியாளர்களிடம் “கொரோனா பற்றி கமலுக்கு ஒன்றும் தெரியாது” என தெரிவித் துள்ள தமிழக முதல்வர் அவர்களே ஒருவருக்கு மரணத்தின் வலி தெரிய வேண்டுமென்றால் மரணித்துப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.  அது போல கொரோனா நோய் தொற்று குறித்து பேச மனதளவில் அவர்களின் வலியை உணர்ந்திருந்தாலே போதும்.

ஆனால் அம்மையார் வழியில் ஆட்சி நடத்துவதாக மூச்சுக்கு முன்னூறுதரம் மூச்சு முட்டப் பேசும் நீங்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வலி குறித்து அறியாமல் செயல்படுவது தான் தமிழகத்தின் சாபக்கேடாகும்

பால்கனி அரசின் தலைவர் மோடி அவர்கள் மார்ச்-24ம் தேதி இரவோடு, இரவாக அறிவித்த ஊரடங்கின் முதல் நாளிலிருந்து இந்த நிமிடம் வரை மக்களின் வலிகளையும், வேதனைகளையும் மனதளவில் உணர்ந்ததால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் தொடங்கி கீழ்மட்ட நிர்வாகிகளையும், தனது இதயமான தொண்டர்களையும் பம்பரமாக சுழல விட்டு மக்கள் நலப்பணிகளை கவனித்துக் கொண்டிருப்பவர் எங்களது தலைவர்.

 மேலும்; கொரோனாவை தப்லிக் ஜமாஅத் பெயரால் தொடங்கி, கோயம்பேடு வழியாக பயணிக்க வைத்து ஊரடங்கிற்குள் ஊரடங்கு போட்டு, மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சூழ்நிலை யில் டாஸ்மாக் கடைகளை திறந்து மக்களிடம் மிச்சம் மீதி இருந்த பொருளாதாரத்தையு ம் சுருட்டி, துவம்சம் செய்து விட்டு கொரோனா நோய் தொற்று விவகாரத்தில் ஒத்துழைக்க வில்லை என கூறி மக்கள் மீதே பழியைப் போட்ட நீங்கள் கொரோனா எப்போது போகும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் என செய்தியாளர்களிடம் ஆரூடம் சொல்லி தப்பித்து கொள்ள முயன்றீர்கள்.
இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் நாடி நரம்பெல்லாம் மக்கள் மீது கொலைவெறி கொண்டவர்களால் மட்டுமே அப்படி சிந்திக்க முடியும். அது உங்களால் முடிந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி கோயம்பேடு காய்கனி சந்தையை சூனியக்கார பகுதியாக சித்தரித்தது நீண்ட காலம் எடுபடாததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தீண்டத்தகாததாக பகுதிகளாக ஊரடங்கு போட்டு, கூடவே மதுரையையும் இணைத்து கொரோனா நோய் தொற்றின் உற்பத்தி மையமாக சித்தரித்து சென்னை வாழ் மக்களையெல்லாம் அவரவர் சொந்த கிராமங்களை நோக்கி ஓட வைத்தீர்கள்.

அத்துடன் விட்டீர்களா..? வந்தாரையெல்லாம் வாழ வைத்த சென்னையில் இருந்து சொந்த கிராமங்களை நோக்கி சென்றவர்களை ஊருக்குள்ளும், வீட்டுக்குள்ளும் அனுமதிக்க வேண்டாம் என தண்டோரா போட்டு புதிய உச்சம் தொட்டீர்கள். இப்படியெல்லாம் யோசிக்க உங்களைத் தவிர வேறு எவராலும் கண்டிப்பாக முடியாது.

இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புறங்களை கொரோனா நோய் தொற்று மையங்களாக மாற்றி சாதனை மேல் சாதனை படைத்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே முதலில் கொரோனா நோய் தொற்று விவகாரத்தில் அந்நோயை அடியோடு விரட்ட உண்மையான அக்கறையோடு செயல்படுங்கள். நான்கு மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை என அவர்கள் மீதும், ஆக்கபூர்வமாக செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதும், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் மீதும் விழுந்து பிராண்டி உங்கள் இயலாமையை தீர்த்துக் கொள்ள முயலாதீர்கள்’.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.