நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் பட்ட காயத்தின் போது வைக்கப்பட்ட கம்பியை வெளியே எடுப்பதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அறுவை சிகிச்சையின் போது, காலில் டைட்டனியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது. அந்த கம்பியை இன்று அகற்ற மருத்துவர்களிடம், நடிகர் கமல்ஹாசன் அறிவுருத்தியிருந்ததாகவும், அதன் காரணமாகவே இன்றைக்கு சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமல்ஹாசன் அவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது நடந்த அறுவை சிகிச்சையின் போது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமா பணியால் அக்கம்பியை இன்று வரை அகற்ற முடியவில்லை.

மருத்துவரின் ஆலோசனைப்படி இன்று அவரது காலில் பொருத்தப்பட்ட கம்பியை அகற்ற அறுவை சிகிச்சை நடக்கிறது. இதற்காக அப்பல்லோ மருத்துவமனையின் நேற்றே கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுவிட்டார். சிகிச்சைக்கு பின், தொடர்ச்சியாக சில நாட்கள் கமல் ஓய்வில் இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.